விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள செக்கடிகுப்பம் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் அலெக்சாண்டர் தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மேல்மலையனூர் - சேத்துப்பட்டு சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதில் மூன்று கான்கிரீட் வீடுகள், ஒரு கூரை வீடு ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி நடைபெற்றது.
அதே பகுதியில் அரசு நிலத்தை கையகப்படுத்தி அதில் பெண் சாமியார் செந்தாமரை என்பவர் கோவில் கட்டி வழிபாடு செய்து வந்துள்ளார். ஆக்கிரமிப்பில் இருந்த அந்த கோவிலையும் அதிகாரிகள் இடிக்க முற்பட்டனர். அப்போது பெண் சாமியார் வாயில் பெரிய கத்தியை வைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என்று சாமி ஆடியுள்ளார். போலீசார் அவரது வாயில் வைத்திருந்த கத்தியை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு அந்த பெண் சாமியார் விஷமருந்தை கையில் வைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றினால் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்.
அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்திய போது பெண் சாமியார் சாமியாடிய வேகத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த பெண் காவலர்கள் அவரை தூக்கிய போது எதிர்பாராத விதமாக சாமியார் பெண் போலீசாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தொடர்ந்து அந்த பெண் சாமியார் போலீசார் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார். உடனே அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் சுபா பெண் சாமியார் செந்தாமரையை தடுத்து நிறுத்தி அவரது உறவினர்களிடம் கொண்டு போய் ஒப்படைத்தார். பெண் சாமியார் செந்தாமரை நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வந்தது தெரியவந்தது. உடனே வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். பெண் சாமியார் ஒருவர் போலீசார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.