விழுப்புரம் மாவட்டம் டவுன் பகுதியில் உள்ள சித்தேரி அருகே அருண்குமார் வசித்து வந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் தர்ஷினி (6 வயது), பாரதி (3 வயது), 4 மாத குழந்தை யுவஸ்ரீ ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் விழுப்புரம் நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அருண்குமாருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் டவுன் பகுதியில் மூணு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையாகிறது. இந்த லாட்டரி சீட்டை தொழிலாளர்கள் பலர் மறைமுகமாக வாங்கி அதன் மூலம் பணப்பரிசு பெற்று குடும்ப கஷ்டத்தையும், ஆடம்பரமாகவும் வாழலாம் என்று நினைத்து, தங்கள் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். அதுபோல் அருணும் மூணு நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி சம்பாதித்த பணத்தை இழந்துள்ளார். தன் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தாலும், அதைக் கொண்டு ஓரளவு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.
இருப்பினும் லாட்டரி சீட்டால் குடும்பம் சீரழிந்து விட்டது என்பதை மனதில் வைத்துக் கொண்டு 12- ஆம் தேதி இரவு தன் மனைவி, குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நகை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சயனைடு என்ற விஷத்தை கொடுத்துவிட்டு, பின்பு அந்த விஷத்தை அருண்குமாரும் அருந்திவிட்டு நடு இரவில் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளனர்.
அருண்குமார் விஷம் அருந்துவதற்கு முன்பு மூணு நம்பர் லாட்டரி சீட்டு என்னைப்போன்ற பல தொழிலாளர்களின் குடும்பத்தை சீரழித்து விட்டது. காவல்துறை இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு விட்ட, பின் சயனைடு சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழுப்புரத்தில் மணல் கொள்ளை, மூணு நம்பர் லாட்டரி, புதுச்சேரி மதுபாட்டில் கடத்தல் என இரவு நேரங்களில் இது போன்று சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் கொடி கட்டிப்பறக்கிறது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டவுன் டிஎஸ்பி தாலுகா, மேற்கு காவல் நிலையம், என அனைத்து காவல்துறையினரும் வசிக்கும் மாவட்ட தலைநகரில் இப்படிப்பட்டசீரழிவு நிலை தொடர்வதைக் கண்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காவல்துறை, இது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு துணை போகிறது என்ற குற்றச்சாட்டும், இதுபோன்ற செயல்களின் மூலம் காவல்துறைக்கு லஞ்சமாக பணம் செல்கிறது. இதனால் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்ற கோபமும் நகர மக்களுக்கு உள்ளது. இனிமேலாவது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.