விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி என்ற ஊரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஊர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே விழுப்புரத்திற்கு முன்பு உள்ளது. இந்த ஊர் அருகில் தான் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் 24 மணி நேரமும் பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி.
அப்படிப்பட்ட இந்த ஊரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது கண்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
வங்கியில் நகை பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. கொள்ளையடிக்கும் முயற்சி மட்டும் நடைபெற்றுள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். வங்கிக்கு இரவு காவலர் நியமிக்கப்படவில்லை என்பதை அறிந்த எஸ்பி ஜெயக்குமார், வங்கி அதிகாரிகளிடம் உடனடியாக இரவு காவலர் ஒருரை நியமிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். காவல்துறையினரும், வங்கி அதிகாரிகளும் கொள்ளையர்களால் வங்கியிலிருந்து பணம் நகை கொள்ளையடிக்கபடாமல் தப்பியது கண்டும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இருந்தும் கொள்ளை முயற்சி முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அங்கிருக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள் போலீஸார்.