விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகள் எங்கும் நடக்கக்கூடாது. அதேபோன்று பொது இடங்களில் யாரும் எச்சில் துப்பக் கூடாது. ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படும். தனியார் பஸ்களில் 50 சதவீதத்திற்கு மேல் பயணிகளை ஏற்றி சென்றால் அந்த பஸ் பறிமுதல் செய்யப்படும். பஸ் டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு தொடரப்படும்.
கடைகள், ஓட்டல்கள் மாலை 4 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். வேறு மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அனைத்து மக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் கிருமிநாசினி கொண்டு கை கழுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து புதிதாக யார் வந்தாலும் தெரியப்படுத்த வேண்டும்.
யாருக்காவது சளி இருமல் சுரம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதிக நெருக்கமாக எந்த இடங்களிலும் கூட கூடாது இப்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை. அரசு அதிகாரிகள் காவல் துறை சுகாதாரத்துறை பொதுநல அமைப்புகள் இப்படி பலரும் மக்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு களையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் மக்களிடம் அதை ஏற்று நடந்துகொள்ளும் பக்குவம் இன்னும் அதிக அளவில் ஏற்படவேண்டும். மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே நோயிலிருந்து விடுபட முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.