திருவண்ணாமலை மாவட்டத்தில் 1080 ஊராட்சிகள் உள்ளன. இதில் மக்கள் தொகை அடிப்படையில் பல ஊராட்சிகள் பேரூராட்சிகளாக மாற்றப்பட வேண்டும். ஆனால், அதனை சில ஆண்டுகளாக அதிகாரிகள் செய்யாமலே இருந்துள்ளனர். இதனால் அந்த ஊராட்சிகள் நிர்வாகம் செய்ய முடியாமல் தடுமாறின. போதுமான அளவு நிதி வசதியில்லாததால் சாலை கூட போட முடியாமல் ஊராட்சி அதிகாரிகள் தவிக்கின்றனர். இந்நிலையில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்ற மாவட்ட உள்ளாட்சி துறை நிர்வாகம், பரிந்துரை பட்டியலை அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் திருவண்ணாமலை நகரத்தை ஒட்டினார் போல் உள்ள (வேங்கிக்கால் ஊராட்சியில் தான், தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், மாவட்ட காவல்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், விளையாட்டு திடல் அமைந்துள்ளது) வேங்கிக்கால் ஊராட்சி, போளுர் தொகுதியில் உள்ள வளர்ந்த கிராமமான தேவிகாபுரம் (செங்கம் தொகுதிக்கு உட்பட்டது).
எப்போதோ பேரூராட்சியாக மாறியிருக்க வேண்டிய தண்டராம்பட்டு, ஆரணி தொகுதிகுட்பட்ட, ஆரணிக்கு மிக அருகில் உள்ள பழமையான கிராமங்களில் ஒன்றான எஸ். வி. நகரம், கலசப்பாக்கம், செய்யார் தொகுதியில் உள்ள தெள்ளாறு, வந்தவாசி அருகிலுள்ள கீழ்கொடுங்காலூர், மலைவாழ் மக்கள் நிரம்பிய மலை கிராமங்களில் பெரிய ஊராட்சியான ஜம்னாமரத்தூர், பழமையான கோயில் உள்ள, வரலாற்று குறிப்புகளிலுள்ள சந்தவாசல் போன்றவற்றை பேரூராட்சியாக மாற்றுவது குறித்த கருத்துருவை அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனோடு செங்கம், போளுர், சேத்பட் போன்றவை நகராட்சிக்கான தகுதியோடு உள்ளன. ஆனால் அவை பேரூராட்சிகளாகவே உள்ளன. அதனால் மாவட்ட நிர்வாகம், மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், அப்பகுதிகள் வளர்ச்சி அடையவும் அவைகளை சிறப்பு நகராட்சிகளாக மாற்றம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.