கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு பெருமளவில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
என்.எல்.சி முதலாவது சுரங்கம், சுரங்கம் விரிவாக்கம் இரண்டாம் சுரங்கம் உள்ளிட்ட சுரங்கங்களில் இருந்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலாவது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக அருகில் உள்ள வானதிராயபுரம் ஊராட்சியில் என்.எல்.சி நிறுவனம் நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்துவதற்காக அறிவிப்பு விடுத்துள்ளது. இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வானதிராயபுரம் கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலங்களை கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி நிறுவனம் சார்பில் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எங்கள் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கூலி தொழிலை நம்பி இருக்கிறோம். ஆனால் என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்கு எங்கள் நிலத்தை கையகப்படுத்த முன் வருகின்றனர். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி ஆர்ப்பாட்டம் செய்கிறோம். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எங்கள் வீடு, நிலங்களை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.