Skip to main content

போலி சான்று; காவல் நிலையத்தை நாடிய வி.ஏ.ஓ

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Villagers making fake certificates without VAO knowledge

திருவெறும்பூரை சேர்ந்தவர் அந்தோணி துரை(55). இவர் சோழமாதேவி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில் சோழமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சந்திரா, சம்சாத் பேகம், அப்துல் ரகுமான், மும்தாஜ், பிரேமா, சாமிநாதன், தஸ்ஸுன்,ஆகிய 7 பேர்  புதிதாக தங்களது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக அந்தோணிதுரை நில உடமை சான்று கொடுத்தது போன்று அந்தோணி துரைக்கு தெரியாமல் போலியாக சான்று தயாரித்து மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

இச்சம்பவம் அந்தோணி துரைக்கு தெரிய வரவே நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அந்தோணி துரை தெரிவித்து உள்ளதாவது, சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் சோழமாதேவி ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கோரிக்கைபடி பட்டா மாற்றம், நில உரிமைச் சான்று போன்றவை வழங்க இயலாது என என்னால் மறுக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் தமக்குரிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற வேண்டுமானால் அவர்களுக்கு உரிய கிரைய ஆவணம், சிட்டா, அடங்கல், பட்டா போன்றவை பயன்படுத்தியும் மற்றும் வீட்டு வரி, நில வரைபடத்தை கொண்டும் மின் இணைப்பு பெற வேண்டும். நவல்பட்டு இளநிலை பொறியாளர் எதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் சான்றை ஒரு ஆவணமாக பயன்படுத்தி புதிய மின் இணைப்பு வழங்க முன் வந்தார் என்பது ஒரு புதிராக உள்ளது.

பட்டா இல்லை, சிட்டா வரைபடம் பதிவு பெற்ற எந்த ஒரு ஆவணமும் இல்லாத நிலையில் மின்னிணைப்பு பெற கிராம நிர்வாக அலுவலர் எழுதியதாக ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தி மின் இணைப்பு வழங்கலாம் என்பது தவறான செயல்களுக்கு வழி வகுக்க முன்னுதாரணம் ஆகி விடும்.  மேற்கண்ட நபர்கள் மின் இணைப்பு பெற கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற அறிவுறுத்தியது யார்? அதன் பெயரில் பொதுமக்களில் சிலர் தவறான ஒரு போலியான கிராம நிர்வாக அலுவலர் சான்று தயாரித்தது எப்படி? என்றும், அதை தயாரித்து அளித்த நபர் யார்? எனவும் மேலும் கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று வர கூறிய நவல்பட்டு மின்சாரம் வாரியம் இளநிலை பொறியாளர் மீதும் போலியான சான்று வழங்கிய நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என கூறி அந்தோணி துரை தனது மனுவில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்