
சென்னையில் கேபிள் வயர்கள் வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கி விபத்து நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே சாலையின் குறுக்கே இண்டெர்நெட் கேபிள் வயர்கள் தொங்கிக் கொண்டிருந்துள்ளன. இத்தகைய சூழலில்தான் வேலைக்கு செல்வதற்காக இன்று (09.05.2024) காலை 09.30 மணியளவில் அவ்வழியாக ராயப்புரம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில் அசோக் இரு சக்கர வாகனத்தில் கேபிள் வயர்கள் சிக்கியுள்ளது. இதனால் சாலையில் நிலை தடுமாறி விழுந்த அசோக் தனது இரு சக்கர வாகனத்தோடு சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது இதனைக் கண்ட போக்குவரத்து காவலர் ஒருவர் இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார். இருப்பினும் எதிரே வந்த மாநகர பேருந்தின் முன்பகுதியி அடியில் சிக்கி கொண்டார். நல்வாய்ப்பாக பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய அசோக்கிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.