சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ வன்னியூர், மேல வன்னியூர், குமராட்சி, காமராஜர் நகர், திருநாறையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேலைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு பணி செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த 3 மாத காலமாக கூலி வழங்கவில்லை. தற்போது தீபாவளி நேரம் என்பதால் உடனடியாக 100 நாள் வேலை கூலியை வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஒன்றிய பிரதமர் மோடி அரசு 100 நாள் வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்காததால் தீபாவளி பண்டிகையின் போது கிராமப்புற ஏழை 100 நாள் கூலி தொழிலாளர்களிடம் பணம் இல்லாததால் இந்த தீபாவளியை கருப்பு தீபாவளியாக அனுசரித்து கருப்புக் கொடி ஏந்தி தீபாவளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், தற்போது தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அவர்களுக்கு பணியாற்றும் நிறுவனங்களில் இருந்து ஊதியம் மற்றும் போனஸ் வழங்கப்பட்டு அவர்கள் தீபாவளியை குடும்பத்துடன் மகிழ்ச்சியான முறையில் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் இந்த நூறு நாள் வேலையை நம்பி பல்லாயிரக் கணக்கில் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் செய்த வேலைக்கு கூலி வழங்காததால் தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். எனவேதான் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி இந்த தீபாவளியை புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.