விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48). இவர், சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மூலம் டெல்லியைச் சேர்ந்த மொத்த துணி வியாபாரி ஒருவரிடம் இருந்து மொத்தமாக துணிகளை வாங்கி வந்து விழுப்புரத்தில் சில்லறை விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால், கரோனா பரவல் காரணமாக துணி வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் துணி வாங்கிய வகையில் அந்த மொத்த வியாபாரிக்கு செலுத்த வேண்டிய உரிய தொகையை திருப்பி செலுத்த முடியாமல் இருந்துள்ளார் செந்தில் குமார்.
இந்த நிலையில், டெல்லி துணி வியாபாரி அங்குள்ள போலீசில் செந்தில்குமார் மீது புகார் கொடுத்துள்ளார். டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னையைச் சேர்ந்த ஜெயப்ரகாஷ் என்பவரை கூட அழைத்துக்கொண்டு விழுப்புரம் வந்துள்ளனர். சாலாமேடு பகுதியில் செந்தில் குமாரை டெல்லி போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது ஜெயப்பிரகாஷ் மூலம் துணி வாங்கிய வகையில் பாக்கி தர வேண்டிய பணத்தை விரைவில் செலுத்துகிறேன் என செந்தில்குமார் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார் செந்தில்குமார். அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைக் கண்ட செந்தில்குமார் உறவினர்கள் திரண்டு வந்து விசாரணைக்கு வந்திருந்த டெல்லி போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். உள்ளூர் போலீசாரிடம் அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று டெல்லியில் இருந்து வந்திருந்த போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு செந்தில்குமாரிடம் டெல்லி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்துவிட்டு திரும்பி சென்றனர்.