18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று நேற்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் நேற்று (01-06-24) வெளியிட்டது. அதில் ரிபப்ளிக் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது, பா.ஜ.க கூட்டணி 359 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 30 இடங்களில் கைப்பற்றும் என்று தெரிவித்தது. அதே போல், இந்தியாவில் உள்ள பல செய்தி நிறுவனங்கள், பா.ஜ.க 350க்கும் மேல் இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்தது.
அதே போல், 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பா.ஜ.க கூட்டணி 23-25 இடங்களிலும், காங்கிரஸ் 3-5 இடங்களிலும் கைப்பற்றும் என்று தெரிவித்தது. செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கர்நாடகா சட்டப்பேரவையின் போது காங்கிரஸ் கட்சி 85 சீட்களை மட்டுமே வெல்லும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், எங்களின் கருத்துக்கணிப்பின்படி 136 சீட்களை வெல்வோம் என உறுதியாக இருந்தேன். 135ல் வென்றோம். அதே போல் இப்போதும் சொல்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும்” என்று கூறினார்.