
8 ஆண்டுகளில் பசுமை கிராமமாக மாற்றி சாதித்த கரைவெட்டி கிராம இளைஞர்களை நம்மாழ்வார் வழி பசுமை கிராமம் விருது வழங்கி காவல்துறை அதிகாரிகள் கவுரவித்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி கிராமத்தில் இளைஞர்கள், 2012 ஆம் ஆண்டு தங்களது கிராமம், மரங்கள் இல்லாமல் வரண்டு கிடப்பதை புரிந்து கொண்டு பட்டப்படிப்பு முடித்த பல இளைஞர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தை 2020க்குள் பசுமை கிராமமாக மாற்றிட வேண்டும் என முயற்சி எடுத்தனர்.
அதற்காக ஆயிரக்கணக்கான பனை விதைகள் விதைத்தும் பல ஆயிரக்கணக்கான பல்லுயிர்ப் பெருக்கத்தை உருவாக்கும் பழ வகை மரங்களையும் நிழல் தரும் மரங்களையும் பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி பசுமையாக மாற்றி சாதித்து பசுமை கிராமமாக 8 ஆண்டுகளில் மாற்றி காண்பித்து உள்ளனர்.
இவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் சார்பில் மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் நம்மாழ்வார் வழி பசுமை கிராமம் விருது வழங்கும் நிகழ்ச்சி கரைவெட்டி புத்தேரி கரையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசுவரன் கலந்து கொண்டு நம்மாழ்வார் வழி பசுமை கிராமம் விருதினை கரைவெட்டி இளைஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நேரு மற்றும் குழுவினருக்கு வழங்கி கவுரவப்படுத்தினார்.
இந்நிகழ்வு கரைவெட்டி இளைஞர்களை உற்சாகமடைய செய்தது. கிராம மக்களும் காவல்துறையினரின் பாராட்டுக்களை பெற்ற இளைஞர்களை வாழ்த்தினர். இந்நிகழ்ச்சிக்கு கீழப்பழுவூர் உதவி காவல் ஆய்வாளர் சரவணக்குமார், ஓவிய ஆசிரியர் மாரியப்பன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாவட்ட தலைவர் அசோக் குமார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆண்டவர், கிராம நாட்டாமை கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கிராம இளைஞர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் மற்றும் கிராம இளைஞர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.