Skip to main content

'வாட்ஸ்-அப்’பில் நிதி திரட்டி ஊருக்கு நல்லது செய்த இளைஞர்கள்!

Published on 22/04/2018 | Edited on 22/04/2018
vizhi

 

கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்ற வைர வரிகளுடன் கிராமத்து இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி, விடியல் தேடும் விழிகள் என்ற பெயரில் பொது நூலகம் ஒன்றை அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியில் திறந்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே  காட்டுப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். பொருளாதாரத்தில் ஓரளவு நிறைவுபெற்ற அந்த இளைஞர்கள் தங்களது கிராமத்தில் உள்ள எல்லோரும் பயன்படும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று துடிப்புடன் இருந்து வந்தார்கள். என்ன செய்யலாம் என்று ஊரில் பொது காரியங்களை செய்து வரும் சக்திவேல் என்ற தங்களது நண்பரிடம் கேட்டிருக்கிறார்கள்.

 அவர், ஊர்மக்களிடம் கேட்டு சொல்வதாகக் கூறியிருக்கிறார். 

 

vizhi1

 

பிறகு இளைஞர்கள் சிலரை அழைத்துக்கொண்டு தனியாக ஊர்மக்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள். பெரியவர்களும் பெண்களும் பொது நூலகம்  ஒன்றை வைக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். சிறுவர், சிறுமியர் செஸ், கேரம்போர்டு போன்ற விளையாட்டு கூடம் வேண்டும் என்று அந்த இளைஞர்களிடம் கூறி இருக்கிறார்கள். அதன்படி பெரியோர்களும் சிறியவர்களும் பயன்படும்படியாக இரண்டையும் ஒருங்கிணைந்த நூலகம் ஒன்றைத் திறப்பதென முடிவெடுத்திருக்கிறார்கள்.

 

இதனை தனது வெளிநாட்டு நண்பர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் சக்திவேல். மேலும் இதற்கென்றே வாட்ஸ்அப்பில் 'விடியல் தேடும் விழிகள் என்ற பெயரில் வாட்சப் தளம் ஒன்றை உருவாக்கினார். அதன்மூலம் பலவகையான நூல்கள் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்கான நிதி தேவைகள் திரட்டப்பட்டு, எல்லா பொருட்களும் வாங்கப்பட்டன. 


ஊரில் இருந்த அரசு சேவை மைய கட்டிடத்தில் மூன்று அறைகள் கட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக பூட்டியே கிடந்தது. அதில் ஒரு அறையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டு இன்று படுவிமரிசையாகத் திறக்கப்பட்டது. 

 

ஊர் மக்கள்தான் விஐபிக்கள். சிறுவர், சிறுமிகள்தான் சிறப்பு விருந்தினர்கள். விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வெல்கம் இனிப்பாக கடலை மிட்டாய் கொடுக்கப்பட்டது. ஊரில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் புத்தாடை அணிந்துக் கொண்டு ஆர்வத்துடன் வந்திருந்தார்கள். 


நூலக உறுப்பினராக இணைந்த அத்தனை பேர்களுக்கும் புகைப்படம் ஒட்டிய அழகிய வண்ண கலர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டது.

 

 இந்த முயற்சியை ஒழுங்குப்படுத்திய சக்திவேல் என்ற ஏற்பாட்டாளர் நிருபருக்கு அளித்த பேட்டியில்,  ‘’ ஊரில் உள்ள சிறுவர்களும் பெண்களும் பொது விசயங்களை படிப்பதில் ஊக்கம் பெற வேண்டும். சமகால அரசியல் நடப்புகளையும் பொதுபிரச்சனைகள் பற்றிய  தெளிவையும் அவர்கள் பெறவேண்டும் என்ற பொது நோக்கத்துடன் இந்த நூலகத்தைத் திறந்துள்ளோம். சிறூவர்களின்  மூளைத்திறன்களை மேம்படுத்தும் விதமான விளையாட்டுப் பொருட்களையும் இங்கு வாங்கி போட்டிருக்கிறோம். எல்லோருடைய நிதி ஆதரவு ஒத்துழைப்பால்தான் இந்த முயற்சி வெற்றி பெறகாரணம்.  நூலகம் ஒன்று வந்தபிறகு தான்  எங்கள் ஊருக்கே ஒரு  அழகும் கம்பீரமும் வந்திருக்கிறது" என்றார்.
  

சார்ந்த செய்திகள்