ஊரடங்கில் மது விற்பனை தடைப்பட்டதில் இருந்து, கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலையெடுத்திருக்கிறது. கடந்த 40 நாட்களில் திருவண்ணாமலை மாவட் டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது காவல்துறையின் சிறப்புப்படை.
இப்படி போளூர் அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவது தொடர்பாக தகவல் கொடுத்த ஊராட்சிமன்ற தலைவர் மீதே தாக்குதல் நடந்திருக்கிறது. விளாப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவரான நாகராஜ் இதுதொடர்பாக கொடுத்துள்ள புகாரில், “சாராயம் காய்ச்சியது குறித்து எதற்காக போலீசுக்கு தகவல் கொடுத்தாய் என்று விளாப்பாக்கத்தை சேர்ந்த குமார் என்னை செல்போனில் மிரட்டினார். பிறகு அவரது கூட்டாளிகளுடன் வந்து, வீட்டிலிருந்த என்னை தாக்கியதோடு, பொருட்களையும் அடித்து நொறுக்கினார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி நாகராஜிடம் நாம் பேசியபோது, “என்னை தாக்க முயல்வதாக நான் போலீசுக்கு தகவல் சொன்னதும், ஒரு எஸ்.ஐ. வந்தார். அவர் முன்னிலையில் வைத்தே என்னை தாக்கினார்கள், கொலை மிரட்டலும் விடுத்தார்கள். இதுகுறித்து நான் புகார் கொடுத்தேன். சாராய கும்பலும் புகார் தந்தது. இரண்டையும் வாங்கிக்கொண்டு, பேசி தீர்த்துக்கொள்ள சொன்னார்கள். இந்த சாராய கும்பலை சேர்ந்தவரின் உறவுக்காரப் பெண், அதே ஸ்டேஷனில் போலீசாக இருக்கிறார். அவர் மூலமாகவே, நான் காவல்துறைக்கு தகவல் சொன்னது, சாராய கும்பலுக்கு தெரிந்திருக்கிறது. உயரதிகாரிகள் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றிருக்கிறேன்’’ என்றார்.
சமூக கேடுகள் பற்றி தகவல் கொடுப்பவர்களை, காவல்துறையை சேர்ந்தவர்களே உள்நோக்கத்துடன் மாட்டிவிடுவதால்தான், காவல்துறை மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்திருக்கிறது.