''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதனால் பாஜகவின் மரியாதைதான் ஒரே நாளில் தகர்ந்துபோயிருக்கிறது. என்று அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.எஸ். சிவசங்கர் கூறியுள்ளார்.
நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி:-
பிரதமர் வருகைக்கு கருப்பு கொடி காட்டுவது சிறுபிள்ளைத்தனமானது. தமிழகத்தில் தற்போது நடப்பது தேச விரோத செயல்கள். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருக்கிறாரே?
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கருப்புக்கொடி காட்டுவது தவறு என்று எச். ராஜா கூறுகிறார். தமிழ் மக்களுக்கான உரிமைகளை, தமிழ் மக்களுக்கான உணர்வுகளை தெரிவிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தாமதம் செய்து ஏமாற்றியதற்கு இந்த கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. இந்த கருப்பு கொடி போராட்டத்தை முதன் முதலில் அறிவித்தது திமுகதான். அதற்கு பிறகுதான் மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அதுவும் சென்னை முழுவதும் கருப்பு என்ற அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. கட்சி வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.
அதேபோல் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் அதை பதிவு செய்ததால்தான் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது.
மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் என்று சொல்கிறார். அவர் வந்த நிகழ்ச்சியால் வேலை வாய்ப்பு ஏற்படுமா, ஏற்படாதா என்று மக்களுக்கு தெரியும். வேலை வாய்ப்பு தருவேன் என்றும், 15 லட்சம் பணத்தை தருவேன் என்றும் கடந்த 4 வருடமாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். எனவே இது ஏமாற்று வாதம். அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது, தமிழ்நாட்டு பிரச்சனைக்காக கருப்பு கொடி காட்டுவதில் எந்த தவறும் இல்லை. இந்த போராட்டம் மக்கள் போராட்டம். தமிழகத்தின் குரலை இந்த போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது.
உலக அளவில் செல்வாக்கு பெற்றுள்ள மோடியை எதிர்க்கட்சிகள் சிறுமைப்படுத்த முடியாது. எதிர்க்கட்சியின் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு காவிரி நீர் பற்றி கவலையில்லை. மோடியை விமர்சிப்பதே நோக்கம். நேற்று நடந்த போராட்டத்தால் உலக அளவில் காங்கிரஸ், திமுகவுக்கு மரியாதையை குறைத்துள்ளது என்று தமிழிசை கூறியிருக்கிறாரே?
''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இது திட்டமிட்டு செய்யக்கூடிய விஷயம் அல்ல. ஏகோபித்த தமிழர்கள், இணையத்தில் புழங்குபவர்கள் தங்களது உணர்வை காட்டியதால்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறது. வெறும் கட்சிக்காரர்கள் மட்டுமே காட்டியிருந்தால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இதுவரை மோடிக்குத்தான் இணையத்தில் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. ஆதரவு அதிகம் இருக்கிறது என்ற சூழல் மாறி மோடிக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று இன்று உலக அளவில் தெரிந்திருக்கிறது. எனவே அவர் உலக அளவில் சுற்றி ஆங்காங்கே ஒரு கருத்தை சொல்லி பெரிய செல்வாக்கு உள்ளதுபோல் கட்டமைப்பு செய்துகொண்டிருந்தது இப்போது ஒரே நாளில் மொத்தமாக தகர்ந்துபோயிருக்கிறது.
அவருக்கான எதிர்ப்பு இவ்வளவு இருப்பது தெரிய வந்தததால் அவர் மீதுதான் தவறான கண்ணோட்டம் இந்திய மக்களிடத்திலும், உலக மக்களிடத்திலும் வருமேயொழிய எதிர்ப்பை காட்டியவர்கள் மீது வராது. எதிர்ப்பை ஏன் காட்டுகிறார்கள் என்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியிலான போராட்டம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் பிரதமரிடம் மனு அளித்துள்ளார்கள். தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய செயல் தலைவர் ஸ்டாலினால் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிந்ததா? ஆளுநரே தேவையில்லை என்று சொன்னவர்கள் தற்போது ஆளுநரை சந்திப்பது அரசியல் சந்தர்ப்பவாதம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?
காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுப்பதை அரசாங்கம் தட்டி கழித்த காரணத்தினால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கூட்டினார். அவர் கூட்டிய கூட்டத்திற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டனர். அதற்கு பிறகு அரசாங்கம் கண்விழித்து எங்கே எதிர்க்கட்சித் தலைவருக்கு பெயர் கிடைத்துவிடுமோ என்று நாங்களே கூட்டுகிறோம் என்று சொன்ன பிறகு, அதிலே கொஞ்சமும் ஈகோ பார்க்காமல் அரசாங்கம் கூட்டும் கூட்டத்திற்காக தான் கூட்டிய கூட்டத்தை ரத்து செய்தார். அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் வெற்றி பெற வேண்டும், தமிழகத்திற்கு நன்மை பயக்க வேண்டும் என்பதால் அரசாங்கத்திற்கு துணையாக இருக்க அவர் தயங்கவே இல்லை. எனவே அதில் குறை சொல்வது என்பது ஜெயக்குமாரின் அறிவிலித்தனம்.
முதல் அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு அவர்கள்தான் அவமானப்பட வேண்டும். காவிரி பிரச்சனையில் பிரதமரிடம் முதல் அமைச்சர் மனு கொடுத்ததாக ஜெயக்குமார் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி எப்போது முதல் அமைச்சராக வந்தாரோ, அப்போதிலிருந்தே ஏதாவது ஒரு மனு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அந்த மனுக்கள் பரிசீலனைக்கு வந்ததும் இல்லை. இந்த மனுவும் பரிசீலனைக்கு வரப்போவதும் இல்லை.
மத்திய அரசாங்கத்தின் துணையோடு இந்த மெஜாரிட்டி இல்லாத அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டியிருப்பதால் தமிழக ஆட்சியாளர்கள் அடிமையாக இருக்கிறார்கள். தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கையில் இருக்கிறது. ஆகையால்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி மத்திய அரசுக்கு தமிழகத்தின் உணர்வை பிரதிபலித்துக்கொண்டிருக்கிறார்.