Skip to main content

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Vikravandi by-election District Collector action order

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில்தான் இடைத்தேர்தல் முன்னிட்டு, விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சி. பழனி இன்று (04.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக 4 நாட்கள் விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வரும் 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் 8 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை என 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட உள்ளன என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கிராமங்கள்தோறும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Basic facilities will be provided in every village in Vikravandi  says Minister I. Periyasamy

விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட சோழாம்பூண்டி, சோழனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட அயினாம்பாளையம், பெரியார்நகர், முத்தியால்பேட்டை, தென்னம்மாதேவி, பூத்தமேடு மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு, காட்டு நாயக்கன் தெரு, ஆதிதிராவிடர் காலனி உட்பட பல கிராமங்களுக்கு நடந்து சென்று பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவு மற்றும்  உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் ஆகியோர்  பொதுமக்களிடம் பேசியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 

அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “திமுக தலைவர் கலைஞர் வழியில் வந்த  மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் ஜாதிமத இன வேறுபாடின்றி அனைத்து  நலத்திட்டங்களும் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல்வரின்  கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் கிராமப்புறங்களை நகரங்களுடன் இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டதால் கிராமப்புற மக்கள் எளிதாக அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல முடிகிறது. போக்குவரத்து வசதி கிராமப்புறங்களுக்கு கிடைப்பதோடு கிராமப்புறங்களில் விளைவிக்கப்படும் விவசாயிகளின் விளைபொருட்கள் எளிதாக நகரங்களுக்கு கொண்டு சென்று  விற்பனை செய்ய முடிகிறது.

Basic facilities will be provided in every village in Vikravandi  says Minister I. Periyasamy

இங்கு என்னுடன் பிரச்சாரத்திற்கு அமைச்சர் அர.சக்கரபாணியும் வந்துள்ளார். நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்களிடம் கோரிக்கை வைத்த பேருந்து நிறுத்த வசதி, பொதுக்கழிப்பறை வசதி, சாலை வசதிகள் தங்கு தடையின்றி குடிதண்ணீர் வசதி கிடைக்க உட்பட அனைத்தும் தேர்தல் முடிந்தபின்பு படிப்படியாக நிறைவேற்றப்படும். பொதுமக்களின் முக்கியமான கோரிக்கையான பகுதிநேர நியாயவிலைக்கடை உடனடியாக அமைத்துக் கொடுக்கப்படும். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா தொகுதி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதின் மூலம் உங்கள் கிராமங்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் எளிதாக வந்தடையும்.” என்று கூறினார். 

தேர்தல் பிரச்சாரத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.நாகராஜன், மார்கிரேட்மேரி, பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சாணார்பட்டி விஜயன், கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் க.மும்மூர்த்தி, சோழாம்பூண்டி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், தெய்வசிகாமணி, திண்டுக்கல் மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா, திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய திமுக செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் முருகேசன், நத்தம் பேரூராட்சி மன்றதலைவர் சிக்கந்தர் பாட்சா அகரம் பேரூராட்சி மன்றதலைவர் நந்தகோபால் உட்பட கட்சிபொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story

காலி மது பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம்; டாஸ்மாக் நிர்வாகம் புதிய தகவல்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Tasmac New Information about Empty Bottle Take Back Scheme

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி மதுபானத்தின் விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாய் செலுத்தி மதுபானப் பாட்டில்களை வாங்கிவிட்டு அதன் பின்னர் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது  கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (05.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபானப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர். 

Tasmac New Information about Empty Bottle Take Back Scheme

அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், “ஒரு நாளைக்குச் சராசரியாக 70 லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு இத்திட்டம் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டமுடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில், “தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.