Skip to main content

விஜய்யின் சொகுசு கார் வரி விவகாரம்.. பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு..!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Vijay's luxury car tax case .. Chennai High Court ordered the registrar

 

வெளிநாட்டுச் சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை வரி தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ் திரைப்பட நடிகர் விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடப்பட்டது. 

 

இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை  விதிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் வணிக வரித் துறை உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்குத் தடை விதிக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். 

 

மேலும், நடிகர் விஜய் உரிய வரியைச் செலுத்த வேண்டும். விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.  தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

 

அதில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்கக் கோரி பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது என்பதாலும் விலக்கு கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனி நீதிபதி விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் மனுவில் கூறியுள்ளார்.

 

மேலும் தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல், இந்த மேல்முறையீட்டு மனுவை எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரியும் விஜய் தரப்பில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து மனுக்களும், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனுக்களை வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மேல் முறையீட்டு அமர்விற்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். 

 

இந்த உத்தரவைத் தொடர்ந்து நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடிகர் விஜய் மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்