தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் தலைமை இன்று (21/06/2022) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான வதந்திகளைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.