
தே.மு.தி.க. சார்பில் வடமதுரையில் கொடியேற்றும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன்பின்னர் அய்யலூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசும் போது, "தற்போது விஜயகாந்த் உடல்நிலை தேறி வருகிறார், தேர்தலுக்கு முன் பிரசார பொதுக்கூட்டங்களில் ஈடுபடுவார். அவர் சேர்த்து வைத்த சொத்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மட்டும் தான், இன்றுவரை ஊழல் கரை படியாத ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே. மேலும் தேர்தல் வாக்குறுதியில் லஞ்சம் ஊழலை ஒழிப்பேன் என்று கூறிவருவது அவர் மட்டுமே.
என்னை கத்துக்குட்டி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் சிங்கத்தின் குட்டியாக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனது ரத்தத்தில் தேமுதிக கட்சிக் கொள்கை உள்ளது. வரும் வழியில் விஜயகாந்த் பாடல்கள் ஒலித்தன. இதேபோல் கோட்டையில் மீண்டும் விஜயகாந்த்தின் குரல் நிச்சயம் ஒலிக்கும். இதற்காகத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்" என்று கூறினார்.
அதன்பின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பாலசுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் எஸ்ஆர்கே பாலு, தலைமை தேமுதிக பேச்சாளர் செல்வராஜ் செல்வதாசன், வடமதுரை ஒன்றிய செயலாளர் செல்வம் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.