சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து போது பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று பலரும் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சுபஸ்ரீ உயிரிழந்த பகுதியில் இருந்து 50 அடி தூரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் விளம்பர போர்டு இருந்தது. 60 அடி உயரம் உள்ள பேனரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது, 60 அடி பேனர் கீழே சாய்ந்ததில் ராஜேஷ் என்ற ஊழியர் படுகாயமடைந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த ராஜேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சுபஸ்ரீ உயிரிழந்த அதே சாலையில் உள்ள பகுதியில் மீண்டும் 60 அடி பேனர் சரிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.