சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, தொடர்ந்து 7 மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அடுக்குமாடி குடியிருப்பைச் சார்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் முறையிடுகையில், சிறுமிக்கு கிடைக்க வேண்டிய நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்க வேண்டும். அதனால், நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து செய்திகளை பார்த்தேன். போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால், நீதிமன்றம் அதனை விசாரிக்க முடியாது. இருப்பினும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்றார். இதனை சிறப்பு வழக்காக கருதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், தலைமை நீதிபதி அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
அதனையடுத்து மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நாராயணன் வாதாடுகையில், சென்னையில் உள்ள குழந்தைகள் நலக் குழுவிற்கு சிறுமி பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை. 5 நாட்கள் ஆகியும் சிறுமி குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறினார். இதனை கேட்ட தலைமை நீதிபதி சிறுமியை உடனடியாக பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட ஆணையம் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.