தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்த்திருக்கும் அரசியல் கட்சிகள், தேர்தல் பரப்புரைகளை தொடங்கியுள்ளன. பல இடங்களில் நலத்திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோல, தமிழக அரசு பொங்கல் தொகுப்பை, ஆளுங்கட்சி தேர்தல் பிரச்சாரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் சொன்ன பிறகும் கூட ரேஷன் கடைகள் முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலைத் தொகுதி மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் அடுத்தடுத்த நலத்திட்டங்கள் கைகொடுத்து வருகிறது. கடந்த மாதம் வரை அரிசி, பருப்பு, எண்ணெய் என 2 முறை நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், அடுத்து, மாவட்டம் முழுவதும் இருந்த கட்சி நிர்வாகிகளை அழைத்து, தொகுதி முழுவதும் வீடுவீடாகச் சென்று முதல்கட்டத் தேர்தல் பணிகளை முடித்தனர். பின்பு, தேர்வு செய்யப்பட்ட பட்டியல்படி ஒரு பூத்துக்கு சுமார் 100 பேர் வரை தேர்ந்தெடுத்து, வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இன்று (11.01.2021) முதல் விராலிமலைத் தொகுதி முழுவதும் சுமார் ஒரு லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வெண்கலப் பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்’ என்ற பெயரில் பையோடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் சீர் இன்று முதல் கொடுக்கப்படுகிறது.
"மாவட்டத்தில் 6 தொகுதிகள் இருந்தாலும் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் தனது விராலிமலைத் தொகுதிக்கு மட்டும் அடுத்தடுத்து நலத்திட்டங்கள் வழங்குவது சரியா? தேர்தல் ஜுரம் அதிகமாக இருப்பதால்தான் தனது தொகுதியை அதிகமாகக் கவனித்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு, இதுபோல கொடுக்க முடியாது என்பதால் இப்பவே கொடுக்கத் தொடங்கிவிட்டார். கடந்த தேர்தலின்போது லட்சுமி விளக்கு கொடுத்தார். இப்போது, பொங்கல் பானை. தேர்தல் நெருங்கும்போது இன்னும் நிறைய கொடுப்பார்" என்கிறார்கள் தொகுதிவாசிகள்.