Skip to main content

அரசு பஸ் டிரைவர் பணிமனையில் தூக்கிட்டு தற்கொலை...

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
bus

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாகவே அரசு பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பணியாளர்கள் கரோனா சிறப்பு பணிகளுக்கு செல்வதற்காக தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில பேருந்துகள் மட்டும் காலை மாலை இயக்கப்படுகிறது. அதன்படி புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரை சில சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

இந்த பணியில் ஈடுபட்டு வந்தார் புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் ஏரியாவை சேர்ந்த ராமராஜ். இவர் விழுப்புரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும் அரசு சிறப்பு பேருந்தை ஓட்டி வருகிறார். அதன்படி வழக்கம்போல் காலை எட்டு முப்பது மணி அளவில் புதுச்சேரியில் அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் கொண்டு வந்து இறக்கி விட்டுள்ளார்.

 

இதையடுத்து அந்த பேருந்தை விழுப்புரம் பணிமனையில் நிறுத்தி விட்டு பணிமனை வளாகத்தில் ராமராஜ் ஓய்வு எடுத்துள்ளார். மாலையில் மீண்டும் பணியாளர்களை அழைத்துக்கொண்டு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல வேண்டும். ஆனால் மாலை 4 மணி அளவில் பஸ்சை இயக்குவதற்காக ராமராஜனை தேடியபோது அவரை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் மணி அடித்தது. அதை எடுத்துப் பேசவில்லை. இதையடுத்து ஊழியர்கள் பணிமனையின் அனைத்து பகுதிகளிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஓய்வு அறைக்கு பின் பக்கம் சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு மரத்தில் ராமராஜ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து ராமராஜ் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட ராமராஜ் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுத்தனர் போலீசார்.

 

அந்த கடிதத்தில், எனது மனமாற்றத்திற்கு காரணம் பேருந்தில் பயணம் செய்து வந்த பணியாளர்கள் என்றும் தனது பங்காளிகள் தன் உடைமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டதாகவும் தனது மனைவியை அலைக்கழித்து வருவதாகவும் இப்படி தனது குடும்ப விஷயத்தை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு எழுதியுள்ளார் ராமராஜ். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அவரது உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். அரசு பேருந்து ஓட்டுநர் பணிமனை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரியிலிருந்து ,அன்று காலை பஸ்சை ஓட்டி வந்த ராமராஜ், திருபுவனை பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டி வந்ததாகவும் அதற்காக அவரை பஸ்சில் பயணம் செய்த அரசு ஊழியர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு மன அழுத்தங்கள் காரணமாக விரக்தியடைந்த ராமராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்