திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலை பகுதியில் உள்ளது கிளாசிக் தோல் தொழிற்சாலை. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் எதுவும் திறக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கிளாசிக் தோல் தொழிற்சாலை, ஊரடங்கு உத்தரவை மீறி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து தோல்களை இறக்குமதி செய்து, பணியாளர்களை வைத்து வேலை செய்துகொண்டிருந்த தகவல் வாணியம்பாடி கோட்டாட்சியர் சுப்பிரமணியத்துக்குத் தகவல் சென்றது.
அந்தத் தகவலைத் தொடர்ந்து அவர்கள் செல்ல வெளிப்பக்கம் பூட்டிவிட்டு உள்பக்கமாக தொழிற்சாலை இயங்கியதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதில் அதிர்ச்சியான அதிகாரிகள், உடனடியாக உள்ளிருந்த பணியாளர்கள் 29 பேரை வெளியே அனுப்பிவிட்டு அந்தத் தொழிற்சாலைக்கு பூட்டுப்போட்டு சீல் வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா நோயாளிகள் இருந்ததால் அது ரெட் அலர்ட் மாவட்டமாக இருந்தது. மருத்துவர்களின் சிகிச்சை கண்காணிப்பில் அவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்து வீடு சென்றனர். இருந்தும் பெரிய கட்டுப்பாடுகள் விதித்து நோய்ப் பரவலை மாவட்ட நிர்வாகம் தடுத்து வரும் நிலையில் விதிகளை மீறி ஒரு நிறுவனம் பணியாளர்களை வரவைத்து வேலை வாங்கியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அங்குப் பணியாற்றிய 29 பேருக்கும் கோவிட் 19 டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன்அருள். அதோடு, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.