நடிகர் விஜய், படங்களைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நின்று 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம், அம்பேத்கர் சிலை மற்றும் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்த நாளன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அண்மையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு வேளை மதிய உணவு இலவசமாகப் பல்வேறு இடங்களில் வழங்கினர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கவுள்ளார். இதற்காக மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் கல்வி விருது விழா நிகழ்வு தொடங்கவுள்ளது. மேலும் ‘கல்வி அழியாத செல்வம்’ என்ற வாசகத்துடன் திருவள்ளுவர் புகைப்படமும் மேடையில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருபவர்களுக்குக் காலை, மதிய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.