‘ரொம்ப போர் அடிக்குது; பொழுதே போகல’ என்று சொன்னதெல்லாம் அந்தக்காலம். புதிது புதிதாக ஏதோ ஒன்றைச் சிந்தித்து ‘மீம்ஸ்’ போட்டு, ட்ரெண்டிங் என்ற பெயரில் பிரபலமாக்கி, பலரையும் பொழுதுபோக்க வைப்பது இந்தக்காலம். ‘10 இயர்ஸ் சேலஞ்ச்’ என பலரும் ஆர்வமாக, அவரவர் இஷ்டத்துக்குப் பொழுதைக் கழித்த நிலையில், தற்போது வாட்ஸப் ஸ்டேட்டஸ் ட்ரெண்டிங் என, வலைத்தளங்களில் மீம்ஸ்களைக் கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றனர்.
லேட்டஸ்ட் வரவான இந்த மீம்ஸ் கான்செப்ட் என்னவென்றால், சினிமாவோ, அரசியலோ, பொது விஷயமோ, ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஒருவரோ, சிலரோ, அவர்களின் படத்தைப் போட்டு, அதே காட்சியில் இடம்பெற்ற, மற்றவர்கள் யார் என்பதை ‘வியூட் பை’ ஆகக் காட்டுவதுதான். இங்கே சில மீம்ஸ்களைப் பார்ப்போம்!
ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்யும் சூர்யாவும் ரமேஷ்கண்ணாவைப் பார்ப்பதற்காக சென்னை வந்து ஒரு மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். குபீர் சிரிப்பை வரவழைக்கும் இந்தக் காட்சியில், இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிடுவார் ‘கோபால்’ என்ற கேரக்டரில் நடிக்கும் சார்லி. இந்த மீம்ஸில் விஜய் சூர்யா இடம்பெற்றிருக்கும் காட்சி படமாகவும், சார்லியை ‘வியூட் பை’ ஆகவும் காட்டியிருக்கின்றனர்.
லண்டன் திரைப்படத்தில் மனைவி நளினி வீட்டில் இல்லாத நேரத்தில், வக்கீல் வெடிமுத்துவாக நடித்திருக்கும் வடிவேலு, மும்தாஜுக்காக ஜூஸ் போடுவார். அந்த நேரத்தில் நளினி வந்துவிட, அறைக்குள் சென்று ஒளிந்துகொள்வார் மும்தாஜ். அப்போது, கையில் ஜூஸுடன் உள்ள வடிவேலுவிடம் “ஜூஸ் யாருக்கு?” என்று கேட்பார் நளினி. “உனக்கு..” என்று திருதிருவென்று முழித்து அசடு வழிவார் வடிவேலு. இதையும் ஜூஸ் ஜாருடன் இருக்கும் வடிவேலு முகத்தை வைத்து மீம்ஸ் போட்டிருக்கின்றனர். ‘வியூட் பை’ ஆக பேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நளினியைக் காட்டியிருக்கின்றனர்.
ரஜினியையும் விடவில்லை. சந்திரமுகியில், வடிவேலு வீட்டு வேலைக்காரியைப் பின்தொடர்ந்து, இடுப்பைத் தொடப் போவதைப் பார்த்துவிடுவார் ரஜினி. இதை வடிவேலு – வேலைக்காரியின் படத்தைப் போட்டு மீம்ஸ் ஆக்கியிருக்கின்றனர். வியூட் பை-இல் வருகிறார் ரஜினி.
குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பைப் பாத்துவிடுவார் விஜய். அப்போது பெரிய களேபரமாகிவிடும். இந்தக் காட்சியில், ஜோதிகாவின் இடுப்பை மட்டும் மீம்ஸாகப் போட்டு, வியூட் பை என விஜய்யைப் போட்டிருக்கின்றனர்.
அரசியலை விட்டு வைப்பார்களா என்ன? தாமரை மலர்ந்தே தீரும் என்று குளத்தில் தாமரை மலர்ந்திருப்பதைப் போன்ற ஒரு படத்தைப் போட்டு, வியூட் பை-யில் ஜீரோ என்று போட்டிருக்கின்றனர். அட, தாமரை மலர்வதை தமிழிசை கூடவா பார்க்காமல் இருப்பார். மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு ஓவர் குறும்புதான்.
சிங்கம் திரைப்படத்தில் அனுஷ்காவின் துப்பட்டா ரவுடி ஒருவனின் கைக்குப் போய்விட, சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா அந்தத் தியேட்டருக்கே வந்து, “எவன்லே அது?” என்று ஆவேசம் காட்டுவார். இந்த சீனை வைத்து, ‘எவன்ல? இத ட்ரெண்ட் ஆக்கினது?’ என்று சூர்யா வாயால் கேட்பதுபோல் காட்டி, ‘மீம்ஸ் க்ரியேட்டர்’ என்று அந்த ரவுடியின் படத்தை வியூட் பை-யில் போட்டிருக்கின்றனர்.
பொல்லாத போக்கிரிதாங்க இந்த மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்!