


கரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட மாதங்களுக்குப் பிறகு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று (13/01/2021) வெளியானது. இதனை அடுத்து மதுரை செல்லூரில் உள்ள திரையரங்கில் இன்று காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை நடிகர் சூரி திரையரங்கில் அமர்ந்து ரசித்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா காலத்தில் அனைத்து துறைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படத் துறையும் திரையரங்குகளும் விதிவிலக்கல்ல. இன்று வெளியான விஜய் மற்றும் சிம்பு திரைப்படங்கள் மூலமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருகை தந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.
அதே சமயத்தில் கரோனா குறித்து தமிழக அரசு வலியுறுத்தி வருகின்ற நடைமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ரசிகர்களும் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.