விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் ராஜன் செல்லப்பா விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது, ''ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் எம்ஜிஆர் அவருடைய திரைப்படங்களில் பல்வேறு நற்குணங்களை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு கட்சி ஆரம்பித்தார். அதனால் அவருடைய பெயர் கட்சிக்கு பயன்பட்டது. நாட்டு மக்களுக்கும் பயன்பட்டது. ஆனால் விஜய் திரைப்படத்தில் மிகப்பெரிய நற்குணங்களையோ, கொள்கைகளையோ சொல்லியதாக எனக்கு தெரியவில்லை. ஏனென்று சொன்னால் சர்க்கார் என்ற திரைப்படத்தில் நலத்திட்டமாக பயன்படுகின்ற மடிக்கணினி ஏனைய நலத்திட்ட உதவிகளை போட்டு உடைக்கின்ற காட்சியை வைத்திருந்தார்கள்.
மதுரை அதிமுக தலைமையில் கூட அந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். விஜய் புதிய கொள்கைகளை விளக்கப் போகிறாரா? மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கலாம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா? என்பதை கூட எங்களால் அறிய முடியவில்லை. புதிய கொள்கைகளை ஏற்படுத்தும் போது இது போன்ற முரண்பாடான கொள்கைகள் வந்தால் நிச்சயமாக மக்கள் மத்தியில் எத்தனையோ கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட பட்டியலில் அவர் கட்சியும் வரும். அவர் நல்ல கொள்கைகளை வைத்தால் மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை சந்திக்க நாங்கள் இருக்கிறோம். அதிமுக அளவிற்கு, எடப்பாடி பழனிசாமி அளவிற்கு மிகப்பெரிய திட்டங்களை வகுப்பதற்கு சரியானவராக விஜய் இருப்பாரா என்பதை எதிர்காலம் தான் சொல்ல வேண்டும்'' என்றார்.