கரோனா விவகாரத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுங்கட்சி அமைச்சரின் சொந்த தொகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை கரைபுரண்டோடிய நிலையில் இதனை தடுத்த எஸ்.ஐ.யை செக்போஸ்ட் காவலுக்கு அனுப்பி தனிப்படையை கலைத்து அதிர்ச்சியளித்துள்ளது மாவட்ட காவல்துறை.
தனது சொந்தத் தொகுதி என்பதால் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் மீது எப்பொழுதுமே தனிக்கவனம் செலுத்தி வரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சட்டம் ஒழுங்கிற்காக மெனக்கெடுவது வழக்கம். இதனால் என்னவோ மாவட்டத்திலேயே சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கோவில்பட்டி காவல்துறை துணைச்சரகம் பெஸ்ட் என குறிப்பிடப்பட்டுள்ளது . இக்கோவில்பட்டி காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர், கழுகுமலை, கயத்தார் மற்றும் கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடந்து வருவதாக தகவல் வர, மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் வழிக்காட்டுதலின்படி, கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய எஸ்.ஐ. இசக்கிராஜா தலைமையில் எஸ்.ஐ.மணிமாறன் உள்ளிட்டோரைக் கொண்டு தனிப்படை டீம் அமைக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன், அமைக்கப்பட்ட இந்த தனிப்படை நாலாட்டின்புத்தூர், கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி, ஏறக்குறைய 6500க்கும் அதிகமான மதுபாட்டில்களை கைப்பற்றியும், 10க்கும் மேற்பட்டோர்களை பிடித்தும் அந்தந்த பகுதி எல்கைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்தது. இது இப்படியிருக்க அவசர, அவசரமாக தனிப்படையை கலைத்து, அந்த படைக்கு தலைமை வகித்த எஸ்.ஐ. இசக்கிராஜாவிற்கு சொந்த ஸ்டேஷன் பணி வழங்காமல் தோட்லாம்பட்டி செக்போஸ்டிற்கு அனுப்பி வைத்துள்ளது மாவட்ட காவல்துறை.
எதற்காக தனிப்படை கலைக்கப்பட்டது.? ஸ்டேஷன் டூட்டி வழங்காமல் செக்போஸ்டிற்கு அனுப்ப என்ன காரணம்..? என மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் விவாதிக்கும் வேளையில், நாலாட்டின் புத்தூரில் 15 அடி பதுங்கு குழியிலிருந்து 500க்கும் அதிகமான பாட்டில்கள் எடுக்கும் வீடியோ மற்றும் செட்டிக்குறிச்சியை சேர்ந்த பட்டு என்ற டாஸ்மாக் கள்ள மார்க்கெட் வியாபாரியின் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகின்றது. 4 நாட்களுக்குமுன் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள் இப்பொழுது வெளிவரக்காரணம் என்ன.? என முந்தைய கேள்வியுடன், இந்த கேள்வியையும் சேர்த்து விவாதித்து வருகின்றனர்.
“தன்னுடைய தொகுதியில் மது கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருவதை அரசல் புரசலாக அறிந்த அமைச்சரே தனிப்படையை அமைக்க மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், அதன் பெயரிலேயே தனிப்படை அமைக்கப்பட்டதாகவும், அந்த தனிப்படை டீமினர் கைப்பற்றியதில் கயத்தாறு பகுதியினை சேர்ந்த ஆளுங்கட்சியினைச் சேர்ந்த ஒருவர் வைத்திருந்த 3,563 மதுபாட்டில்களும் அடக்கம் என்றும். இதனாலயே தனிப்படை கலைக்கப்பட்டு, எஸ்.ஐ.யும் தூக்கியடிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர். இந்த விபரமெல்லாம்அமைச்சருக்கு தெரியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி..?." என்கின்றனர் உளவுத்துறை போலீசார். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது. மௌனம் கலைக்குமா மாவட்ட காவல்துறை..?