கரோனா தொற்றின் காரணமாக நீதிமன்றங்களில் மே மாதம் முழுவதும் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க எடுக்கப்பட்ட முடிவை கைவிடக் கோரி இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன் தலைமை நீதிபதிக்கு வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள், வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதம் வழக்கமாக விடப்படும் கோடை விடுமுறையைத் தள்ளிவைப்பது என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மே மாதம் முழுவதும் காணொலிக் காட்சி மூலம் வழக்குகள் விசாரி்க்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த முடிவை கைவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு மூத்த வழக்கறிஞரும், இந்திய பார்கவுன்சில் தலைவருமான பிரபாகரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், வீடியோ கான்பரன்சிங் முறையை செயல்படுத்துவதற்கு முன், அதுகுறித்து சரியான கட்டமைப்பு வேண்டும் என்றும், இதனால் ஏழை வழக்கறிஞர்கள் வாதிடுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், காணொலிக் காட்சியின் மூலம் வாதிடுவது, நீதிமன்றத்தில் வாதிடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் காணொலிக் காட்சியினால் வழக்கில் யார் ஆஜராகிறார் என நீதிபதி கண்டறிவது கடினமாக இருக்கும் எனவும், அதனால் வீடியோ கான்பரன்சிங் முறையைக் கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். விசாரணையில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.