வழக்கறிஞர்களுக்கான இலவச காணொலிக் காட்சி மையத்தை ஓய்வுபெற்ற நீதியரசர் தமிழ்வாணன் தொடங்கிவைத்தார்.
கரோனா ஊடங்கினால், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் காணொலிக் காட்சி மூலமாக அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன. அதேநேரம், ஆன்லைன் வழக்கு விசாரணைக்கு ஸ்மாட் போன், கேமராவுடன் கூடிய கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவை தேவைப்படுகிறது. இவை இல்லாத இளம் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள வழக்கறிஞர்களால், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இதுபோல் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்காக, இலவச காணொலிக் காட்சி மையத்தை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் உருவாக்கியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள அங்கப்பன் தெருவில் உள்ள தன் அலுவலகத்தில் அம்மையத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த மையத்தை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன் தொடங்கிவைத்தார். ஊரடங்கு காலத்தில் இப்படி ஒரு சமுதாயப் பணியைச் செய்வது பாராட்டுக்குரியது. இந்த இலவச மையத்தை, இளம் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீதிபதி எஸ்.தமிழ்வாணன் அறிவுரை வழங்கியுள்ளார்.