லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான கோவை பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதி, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது .
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக, பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதியும் , அதற்கு உதவியாக இருந்த பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர், கடந்த 3ம் தேதி கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர் . இவ்வழக்கில், துணை வேந்தர் கணபதிக்கு, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து ஜாமீன் கொடுக்க மறுத்து வருகிறது .
இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட பொய்யான வழக்கு என்றும் . தன்னை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போதும், தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதனால், சாட்சிகளை மிரட்டவும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த வழக்கால், சொல்ல முடியாத துயரத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து மனு மீதான விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார் .
அதே போல லஞ்சம் வாங்கியதில் தொலை தூரகல்வி இயக்குனர் மதிவாணனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன் ஜாமின் கோரி மதிவாணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.