தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள் பலர் தேர்தல் பணியாற்றியதால், அவர்களுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வகையில், தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பலருக்கு அந்த தபால் ஓட்டு சென்று சேரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், அருகே இருக்கும் அண்டை மாவட்டமான ராமநாதபுரத்தில் தேர்தல் பணியாற்றினர். அவர்களுக்கு எம்.பி. தேர்தலுக்கான வாக்குச் சீட்டை அனுப்பி வைத்த தேர்தல் அதிகாரிகள், விளாத்திகுளம் இடைத்தேர்தலுக்கான 'தபால் வாக்குச் சீட்டை' அனுப்பி வைக்கவில்லை என புகார் கூறப்படுகிறது.
![Vettathikulam teachers who do not have a postal vote](http://image.nakkheeran.in/cdn/farfuture/GEpSSPT-0qNvnmLy6WOouq1R96h4_JxwnVpuFwIYCSI/1556085159/sites/default/files/inline-images/postal-vote.jpg)
இதுகுறித்து விளாத்திகுளம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர். அதற்கு தேர்தல் அதிகாரி, "வெளிமாவட்டத்தில் வேலை பார்க்கும் 54 ஆசிரியர்களுக்கு மட்டுமே இடைத் தேர்தல் (விளாத்திகுளம்) வாக்குச் சீட்டு வந்தது. அதனை நாங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டோம். மற்றபடி எம்.பி தேர்தல் (தூத்துக்குடி) வாக்குச் சீட்டு எல்லாமே ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்தார்கள் அதனால் எங்களுக்கு தெரியாது" என்றார்.
எம்.பி.யை தேர்வு செய்ய ஓட்டுப் போட்டுட்டோம், எம்.எல்.ஏவை தேர்ந்தெடுக்க எங்களுக்கு உரிமை இல்லையா? என்கின்றனர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு, ஓசூர் இடைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு மட்டும் அனுப்பி வைத்த அதிகாரிகள், எம்.பி தேர்தலுக்கான வாக்குச் சீட்டை அனுப்பி வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நமக்கு ஓட்டுச் சீட்டு வருமா? வருதா? நம்பலமா? நம்பக் கூடாதா? என்ற பதை பதைப்பில் விளாத்திகுளம் தொகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே மதுரையில் தபால் ஓட்டுக்களையும், ஆவணங்களையும் மாற்றிவிட்டதாக பெண் வட்டாட்சியர் மீது புகார் எழுந்திருக்கிறது.