சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி 17 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
![vck](http://image.nakkheeran.in/cdn/farfuture/cChd9iJGcHRhf9L51R6BPmr_f9Q2xIi0Y_sJboOQEsg/1533347620/sites/default/files/inline-images/64117395.jpg)
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது சிறுமியை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த பல மாதங்களாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி சீரழித்து வந்த செய்தி நெஞ்சத்தை பதறச் செய்கிறது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சிலர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அவர்கள் எல்லோரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை முறைப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதில்லை என்பதும் இந்த குற்றங்கள் அதிகரிக்க ஒரு காரணமாக உள்ளது. குழந்தைகள் தொடர்பான சட்டங்களைப் பற்றியும், பாலியல் பிரச்சனைகள் தொடர்பாகவும் சமூகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாதது இந்த குற்றங்கள் பெருக வழி செய்கிறது. பள்ளி மாணவர்கள் மட்டத்திலேயே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து அதிகபட்ச தண்டனை அளிக்கவேண்டும். குற்றம்சாட்டப்பட்ட எவருக்கும் பிணை வழங்கக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.