Skip to main content

போலிஸ் துணையோடு குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம்; போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பொதுமக்கள்

Published on 28/04/2019 | Edited on 28/04/2019

 

"விளை நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க ஆர்வம் காட்டுவதை தவிர்த்துவிட்டு கடற்கரையோரமாக பதித்தால் என்ன நட்டம் வந்துவிடப்போகிறது," என ஆத்திரத்தோடு அமைதிப் பேச்சுவார்த்தையில் கேள்வி எழுப்பினர் விவசாயிகள்.

 

k

 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையபாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் 22  ஆழ்துழாய் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் வேட்டங்குடி, எடமணல் வருஷபத்து வழியாக தரங்கம்பாடி அருகே உள்ள மேமாத்தூரில் செயல்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல 29 கிலோமீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியாக குழாய் அமைக்கும் பணியை கெயில் எனும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

 

 நாகூரில் பகுதியில் உள்ள விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணியை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

அமைதிப்பேச்சு வார்த்தையில், "விளைநிலங்களின் வழியாக குழாய்கள் பதித்தால் விளைநிலங்கள் பாழாகிபோகும்,விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகிவிடும், விளைநிலங்கள் வழியாக குழாய்கள் கொண்டு செல்வதை தவிர்த்துவிட்டு கடற்கரையோரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தினால், பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. அதை தவிர்த்துவிட்டு விவசாய நிலங்களை மலடாக்கும் என்னத்தோடு குழாய் பதிப்பதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்." என்று கூறியபடியே கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வெளியேறினர்.

 

கூட்டத்தில் பேசிய வட்டாட்சியரோ,"பதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு  22 பேருக்கு காசோலையை வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தடை விதிக்கமுடியாது ," என்று கூறியிருக்கிறார். 

 

இந்தநிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மறுநாளே நாங்கூர் பகுதியில் கெயில் நிறுவனத்தினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழாய்பதிக்கும் பணிகளை தொடங்கியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இதை கேள்விப்பட்ட பொதுமக்கள் கோபத்தின் உச்சத்திற்கே சென்று அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்