புதுக்கோட்டையில் உள்ள வேங்கவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழக்கானது கடந்த 16 ஆம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மூன்று நாட்களாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 35 சிபிசிஐடி போலீசார் இறையூர், வேங்கை வயல் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று வரை 55 பேரிடம் விசாரணை மேற்கொண்டு சாட்சியங்கள் பெறப்பட்டது. இந்தநிலையில் இன்று இறையூர், வேங்கைவயல் அருகே உள்ள காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐந்து நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.