Skip to main content

நீட்டுக்கும் அதனை நுழைத்த மோடி அரசுக்கும் சேர்த்தே பாடை கட்டிட தமிழகமே கிளர்ந்தெழ வேண்டும்: வேல்முருகன்

Published on 06/05/2018 | Edited on 06/05/2018
velmurugan


மக்களாட்சியின் மாண்புகளான சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம் (சமத்துவம்) இவற்றிற்கு நேர்மாறாக ஒரு நவீன பாசிச சர்வாதிகார நடைமுறையின் தொடக்கமே இந்த ’நீட்’ மற்றும் அதன் கெடுபிடிகள்! கடந்த ஆண்டு மாணவி அனிதாவை பலிகொண்ட நீட், இந்த ஆண்டு மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியை பலிகொண்டிருக்கிறது. உயிரிழந்த கிருஷ்ணசாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய்  இழப்பீட்டை வழங்க மத்திய, மாநில அரசைக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தொடக்கத்திலேயே நீட்டைக் கிள்ளி எறிந்திருக்க வேண்டும்; இப்போது அதனை நுழைத்த மத்திய பாஜக மோடி அரசுக்கும் சேர்த்தே பாடை கட்டிட தமிழகமே ஒன்றுதிரண்டுக் கிளர்ந்தெழ வேண்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
 

 பதினெட்டாம் நுற்றாண்டிலேயே பிரஞ்சுப் புரட்சி இவ்வுலகிற்கு வழங்கிய உயரிய, உன்னத அருங்கொடை ”சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம் (சமத்துவம்)”!
 

இதனை முன்னிறுத்தித்தான் பயணிக்கின்றன இன்றைய உலக நாடுகள் பலவும்; சில நாடுகளில் இதற்கு மாறான நிலை இருந்தாலும், இதனை நோக்கியே மக்களின் உணர்வுகள் மேலெழும்புவதால், அதனை அந்நாடுகளால் மறுதலிக்க முடியவில்லை; அதனால் மக்களோடு சேர்ந்தே அவை பயணிக்கத் தொடங்கிவிட்டன.
 

ஆனால் இந்தியா மட்டும்தான் மொத்த உலகத்திலும் இதில் விதிவிலக்கு!
 

காரணம், உலகில் எங்கு தேடினாலும் காண முடியாத சாதி, மதம் என்னும் சக்கரங்களில்தான் இந்தியத் தேர் பயணிக்கிறது.
 

வகுப்புவாதம், மதவாதம் என்பதுவே இந்தியச் சமூகமாய், கலாச்சாரமாய், அரசாட்சியாய், நிர்வாகமாய், நீதி பரிபாலனமாய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது; இந்தக் கட்டமைப்பின் கட்டுப்பாட்டில்தான் தமிழினம் உள்ளிட்ட அனைத்து மொழிவழி தேசிய இனங்களும் சிறைவைக்கப்பட்டிருக்கின்றன.
 

அழுகிப் புரையோடி துர்நாற்றமடிக்கும் இந்தப் பழமைவாதச் சேற்றிலிருந்து மீளவே 70 ஆண்டுகளாக இங்கு போராட்டங்கள்! தமிழ்நாடு இதில் முன்னோடி, முன்மாதிரி!
 

ஆனால் 2014ல் வந்த மத்திய பாஜக மோடி அரசு, பழமைவாதச் சேற்றிலிருந்து வெளிவந்துவிடாதபடி தடுத்து, அந்தச் சேற்றிலேயே தள்ளி மக்களை மூழ்கடித்துவிடும் வேலையில் இறங்கியிருக்கிறது.
 

இந்தப் பின்னோக்கு நடவடிக்கையின் சோதனை முயற்சியாக, தொடக்கப் புள்ளியாக நுழைக்கப்பட்டதுதான் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு மற்றும் அதன் கெடுபிடிகள்!
 


முதன்முதலில் கடந்த ஆண்டு நீட் வந்தபோது என்ன நடந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.


இந்த ஆண்டு என்ன நடக்கிறது என்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இதான் இந்தத் தேர்வை நடத்துகிறது.


இன்று இந்தியா முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதுகின்றனர்.
 

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்து  7ஆயிரத்து 288 மாணவர்கள்!
 

அதாவது ஒப்பீட்டு அளவில் பிற மாநிலங்களைவிட 3 மடங்கு அதிக மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள்தான்.
 

இதிலிருந்து, இந்தியாவிலேயே தமிழ்நாடு, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தனியோர் உயர்ந்த இடத்தில் இருப்பது தெரியவருகிறது.
 

ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தையும் ஒன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளினால்தான் தங்களது வகுப்புவாத-மதவாத பப்பு வேகும் என்றே நீட் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது மோடி அரசு.
 

அதிலும் தமிழகத்தைக் குறி வைத்துத் தாக்கிவருகிறது.
 

அதனால்தான் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தொலைதூர சிக்கிம், ராஜஸ்தான், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் செண்டர்களைப் போட்டது சிபிஎஸ்இ.
 

எப்படியாவது தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பைத் தடுக்க வேண்டும் என்ற மோடியின் கெடுமதியன்றி இது வேறில்லை.
 

வெளிப்படைத்தன்மைதான் ஜனநாயகத்தின் சிறப்பு. அந்த வெளிப்படைத்தன்மையை ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் அதாவது சர்வாதிகாரிகள் ஏற்க வாய்ப்பே இல்லை. அதனால்தான் விதிகள், ஒழுங்குகள் என்று சொல்லிக்கொண்டு கெடுபிடிகளை, அதாவது பாசிசத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள்.
 

அத்தகைய அருவருப்புகள்தான் நீட்டில் நடக்கும் கெடுபிடிகள்!
 

காலை 7.30 மணிக்கு மாணவர்கள் நீட் தேர்வு மையங்களுக்குள் வந்துவிட வேண்டும்; 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதி இல்லை; தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதி; 9.45 மணி வரை ஹால் டிக்கெட் சோதனை; அதன்பின் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
 

மாணவிகளைப் பொறுத்தவரை, மாணவிகள் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், தலையில் இருந்த ஹேர்பின் போன்றவைகள் அகற்றப்பட்டன. தலைமுடியில் பின்னல் அகற்றப்பட்டே தேர்வு மையத்திற்குள் அனுமதி. காலணி கூட சாதாரணமாகவே இருக்க வேண்டும். மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் அறுக்கப்பட்டன.
 

நீட்டை முந்தைய அரசுகள்தான் கொண்டுவந்ததாக ஒரு பச்சைப் பொய்யை கொயபல்ஸாட்டம் திரும்பத் திரும்பச் சொல்வது மோடி ஆட்களது திட்டமிட்ட ஒரு தந்திரமாக இருக்கிறது.
 

அவர்கள் கொண்டுவர நினைத்திருக்கலாம்; ஆனால் அது நிச்சயம் மோடி கொண்டுவந்தது மாதிரி இல்லை. அதை தமிழகத்தின் விருப்பத்துக்கு மாறாக திணிக்கவும் நினைக்கவில்லை.
 

பச்சையாகப் புழுகிக்கொண்டே மோடிதான் 2014ல் இந்த நீட்டைக் கொண்டுவந்தார்; ஆனால் ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில், உச்ச நீதிமன்றம் என்று அவற்றின் மீது பழியைப் போட்டார்.
 

நீட்டைத் திணித்த மோடியின் இந்த கொடூர எண்ணம் தமிழக மாணவர்களின் உயிரையும் பறிப்பதை உள்ளடக்கியது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை!
 

கடந்த ஆண்டு மாணவி அனிதாவை பலிகொண்ட நீட், இந்த ஆண்டு மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியை பலிகொண்டிருக்கிறது.
 

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்திற்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் சென்டர் போட்டு, தேர்வெழுத அங்கு தந்தை கிருஷ்ணசாமி துணையுடன் சென்றிருந்தார்.
 

இன்று காலை மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பிவிட்டு தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குத் திரும்பிய கிருஷ்ணசாமி மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாகவே மரணமடைந்துவிட்டார்.
 

தந்தை இறந்தது தெரியாமல் மகன் அப்போது தேர்வெழுதிக்கொண்டிருக்கிறார்; கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவரும் ஏற்பாட்டில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.
 

மக்களுக்கு எதிராகவும் கார்ப்பொரேட்டுகளுக்கு ஆதரவாகவும் அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பாக மோடி நுழைத்த நீட்டால் உயிரிழந்த கிருஷ்ணசாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
 

அவர் மகன் கஸ்தூரி மகாலிங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய்  இழப்பீட்டை வழங்க மத்திய,மாநில அரசைக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
 

 தமிழக மக்களே, தயவுசெய்து சற்றே சிந்தித்துப் பாருங்கள்; இல்லையென்றால் விவரம் தெரிந்தவர்கள் என்று நீங்கள் கருதும் யாரையாவது கேட்டுப் பாருங்கள்; இப்படி ஒரு கர்ணகொடூர கெடுபிகளில் எந்தக் காலத்திலாவது உலகில் எங்காவது எந்தத் தேர்வாவது நடந்ததுண்டா?
 

மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரது உயிருக்கு எமனாக இந்த நீட்டைத் தவிர வேறு எந்தத் தேர்வாவது அமைந்ததுண்டா?.
 

இந்த நீட் மோடிக்குத் தேவையாயிருக்கிறது; மக்களை பிளவுபடுத்த இதுவும் ஓர் ஆயுதம்; அந்த வகையில் இது மோடிக்கு மிக மிக அவசியம்! பாசிஸ்ட்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் ஏது வேறு புகலிடம்?
 

எனவேதான் உரத்து சொல்கிறோம்:
 

மக்களாட்சியின் மாண்புகளான சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம் (சமத்துவம்) இவற்றிற்கு நேர்மாறாக ஒரு நவீன பாசிச சர்வாதிகார நடைமுறையின் தொடக்கமே இந்த ’நீட்’ மற்றும் அதன் கெடுபிடிகள்!
 

நீட் கடந்த ஆண்டு மாணவி அனிதாவை காவுகொண்டது; இந்த ஆண்டு மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியை காவு வாங்கியிருக்கிறது!
 

தொடக்கத்திலேயே நீட்டைக் கிள்ளி எறிந்திருக்க வேண்டும்; இப்போது அதனை நுழைத்த மத்திய பாஜக மோடி அரசுக்கும் சேர்த்தே பாடை கட்டிட தமிழகமே ஒன்றுதிரண்டுக் கிளர்ந்தெழ வேண்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

 

சார்ந்த செய்திகள்