Published on 01/09/2019 | Edited on 01/09/2019
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களான முருகன், சிவராஜ் ஆகிய இருவரும் தங்களது குழுவோடு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்ற இந்த வாகன சோதனையில் 38 வாகன ஓட்டிகளிடமிருந்து போக்குவரத்து விதிகளை மீறியதாக 3,84,500 ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதுப்பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் பட்டாபிராமன், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களது பெற்றோர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு, பெற்றோரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதனால் பெற்றோர்கள் 18 வயதுக்கு குறைவான தமது பிள்ளைகளிடம் இருசக்கர வாகனத்தை தந்து அனுப்பாதீர்கள் என்றார்.