கோடைக்காலம் தொடங்கினால் மின் பற்றாக்குறை ஏற்படும் என்பது வாடிக்கையாகிவிட்டது. தமிழகம் மின்மிகை மாநிலம் எனச் சொல்லுகிறது அ.தி.மு.க. அரசாங்கம். ஆனால் உண்மையோ அதற்கு நேர்எதிராக இருக்கிறது. கோடைக்காலம் தொடங்கிய ஏப்ரல் மாதம் முதலே மின்வெட்டு என்பது தினமும் 3 மணி நேரம் நடக்கிறது. காலை ஒரு மணி நேரம், மதியம் ஒரு மணி நேரம், இரவில் கால் மணி நேரம், அரை மணி நேரம் என அடிக்கடி நிறுத்துகின்றனர். இப்படிச் சராசரியாக ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மின்வெட்டு நடக்கிறது.
நாடு முழுவதும் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தமிழகத்தில் 50 சதவித அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை, நிறுவனங்கள் இயக்கவில்லை. சுமார் 40 சதவித மின்சாரத்தைப் பயன்படுத்தவில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் மின்வெட்டு உள்ளது என்பது குறிப்பிடத்ககது.
வேலூர் மாநகரம் புதிய பேருந்து நிலையம் அருகில் முத்து மண்டபம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகின்றன. மே 17ஆம் தேதியான இன்று மதியம் முதல் தற்போது வரை சுமார் 5 மணி நேரமாக அந்தப் பகுதியில் மின்சாரமில்லை. இதுப்பற்றி அப்பகுதி இளைஞர்கள் மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் கூறியுள்ளனர்.
மின்வாரியத்தில் இருந்து எந்தப் பதிலும் இல்லையாம், கோடைக்காலத்தில் வெய்யில் மற்றும் புழுக்கத்தில் வீட்டுக்குள் இருக்க முடியாமல் தவித்துள்ளனர். இரவு தொடங்கியும் மின்சாரம் வராததால் நொந்துபோன அப்பகுதி பொதுமக்கள் மாலை 6 மணியளவில் வேலூர் டூ காட்பாடி சாலையில், மறியலில் அமர்ந்தனர்.
இதனால் அந்த வழியாக அவசரத்துக்குச் சென்ற வாகனங்கள் நின்றன. இதுப்பற்றி தகவல் தெரிந்து வந்த வடக்கு காவல்நிலைய போலிஸார், பொதுமக்களை மிரட்டி மறியலைக் கைவிட செய்தனர். மின்வாரிய அதிகாரிகளிடம், காவல்துறையினர் கேட்டபோது, அந்த ஏரியாவில் எதனால் மின்சாரம் போகுதுன்னு தெரியவில்லை, பார்க்கிறோம் என பதில் சொல்ல போலிஸூம் கடுப்பாகியுள்ளது. விரைவில் கரண்ட் வந்துவிடும் எனச் சமாதானம் செய்து அவர்களை அங்கிருந்து அனுப்பியவர்கள், மீண்டும் மறியல் செய்துவிடக்கூடாது என அங்கு இரண்டு காவலர்களைக் காவலுக்கு நிறுத்தியுள்ளனர் அதிகாரிகள்.