வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூதமலை காட்டு பகுதியில் 30 இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக அக்கிராம பொதுமக்கள் புகார் கூறியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் கோபத்தில் இருந்துள்ளனர். ஜூலை 16 ஆம் தேதி காலை மக்களே திரண்டு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை விரட்டியடித்தனர்.
கள்ளச்சாராய பானைகளை உடைத்த போது ஒரு பைப் லைனை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். சாராயம் காய்ச்சும் இடத்தில் இருந்து பிளாஸ்டிக் குழாய் பொருத்தி மலையிலிருந்து கீழ் பகுதிக்கு சாராயத்தை அனுப்பியது தெரிய வந்துள்ளது. பூதமலை காட்டில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.