வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி நிறுவனரான ஏ.சி.சண்முகம், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போன்றோர் களத்தில் நின்றனர். தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது கதிர்ஆனந்த் வீடு, கல்லூரி, அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறையும், பறக்கும் படையும் சோதனை செய்தது. இதில் 11.46 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இந்த காரணத்தை காட்டி, வாக்குப்பதிவுக்கு 2 தினங்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 16ந் தேதி, வேலூர் பாராளுமன்ற தேர்தலை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம். இதனால் அனைத்து வேட்பாளர்களும் அதிர்ச்சியாகிவிட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஏ.சி.சண்முகம். அதன் பின் இவரின் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
இந்நிலையில், எப்போது வேலூர் தொகுதிக்கு தேர்தலை நடத்துவீர்கள் என முன்னாள் வேட்பாளர்கள் ஏங்கிக்கொண்டு உள்ளார்கள். தேர்தல் ரத்து செய்த நிலையில், சில நாட்கள் அமைதியாக இருந்த ஏ.சி.சண்முகம் தரப்பு, தற்போது மீண்டும் இணையத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறது.
அரவக்குறிச்சி, சூலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேதி அறிவித்ததைபோல, வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கும் தேர்தலை நடத்த தேதி அறிவிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் முன்பு களத்தில் நின்ற வேட்பாளர்கள். இந்நிலையில் ஏ.சி.சண்முகம், டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்திடம், உடனடியாக வரும் மே 19ந் தேதி இறுதிக்கட்ட தேர்தலோடு இந்த தொகுதிக்கும் தேர்தலை நடத்த வேண்டுமென மனு தந்துவிட்டு வந்துள்ளார் எனக்கூறப்படுகிறது.