![flood](http://image.nakkheeran.in/cdn/farfuture/RP5f_-7Qr_sUpbBMaxgYEk3FQdSUhg9QZuF076rYK94/1534806226/sites/default/files/inline-images/IMG-20180820-WA0007.jpg)
கடந்த 15 நாட்களுக்கு மேலாக கேரளா மாநிலத்தில் பெய்து வந்த மழை, பெரும் பொருட்சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்திவிட்டு தற்போது ஓய்வை நோக்கி நகர்கிறது. இந்தியாவை ஆளும் மோடி அரசு, கேரளா மாநிலத்துக்கு குறைந்த அளவே நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
இதனால் கடவுளின் தேசத்துக்கு உதவுங்கள் என கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து உதவிகள் சென்ற வண்ணம் உள்ளன. திராவிட உறவுகளான கர்நாடகா, ஆந்திரா, தமிழக மக்கள் அதிக அளவில் கேரளா மக்களுக்கு பணம் மற்றும் பொருள் உதவியை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், இராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், குடியாத்தம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூரை சேர்ந்த பத்திரிகைத்துறை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரிசி, ரஸ்க், ஆவின் பால்பவுடர், பிஸ்கட், பிரட் நாப்கின், வாட்டர் கேன்கள், துணிகள் என சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இன்று ஆகஸ்ட் 20ந்தேதி மாவட்ட ஆட்சியர் ராமனிடம் வழங்கினார்கள்.
![flood](http://image.nakkheeran.in/cdn/farfuture/lSw3fhT1_B_AEUAzf_YYvzoVXlzgO4xilwckFnLCgIY/1534806250/sites/default/files/inline-images/IMG-20180820-WA0017.jpg)
இதேப்போல் பல தரப்பினரும் தந்த பொருட்களோடு செய்தியாளர்கள் வழங்கிய பொருட்கள் சேர்க்கப்பட்டு கேரளாவுக்கு 8 லாரிகள் மூலமாக 1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.