Skip to main content

120 நாட்களாக உணவு வழங்கும் தி.மு.க –கரோனா உருவாக்கிய துயரம்!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Vellore DMK providing food at pandemic time

 

 

கரோனா உலக மக்களின் வாழ்க்கையை, வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக்கிவிட்டது. வயதான காலத்திலும் வேலை செய்து கூலி வாங்கி குடும்பத்தை நடத்தியவர்கள், இன்று அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் தவிக்கிறார்கள். கரோனா பரவல் தொடக்கத்தில் குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் நிவாரண நிதியாக வழங்கியது அ.தி.மு.க அரசு. தி.மு.க நிர்வாகிகள், தங்களது பகுதிகளில் ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகளை வழங்கினார்கள். ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தை தொடங்கிய தி.மு.க. தலைமை, போன் செய்து உதவி கேட்பவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை கொண்டு சென்று தந்தது. பல தன்னார்வ அமைப்புகளும் வழங்கின. இதனைப்பார்த்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்களும் உதவிகளை வழங்கினார்கள்.

 

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் ஏழைகளுக்கு தினமும் மதியம் உணவு வழங்க தொடங்கினர். தற்போது, மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் தமிழகத்தில் கரோனா உதவி வழங்குவது என்பது 95 சதவிதம் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் தற்போதும் தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் உணவு வழங்கிவருகின்றனர்.

 

இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவுமான நந்தகுமாரிடம் பேசியபோது, “கரோனா பரவல் தொடங்கிய ஏப்ரல் மாதம் முதல் எங்கள் தலைவர் ஸ்டாலின் சொன்னபடி, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏழை மக்களுக்கு, அரிசி, பருப்பு உட்பட பல உதவிகளை செய்தேன். எனது மத்திய மாவட்டத்தில் நானும், கட்சி நிர்வாகிகளும் உதவிகளை செய்தோம். அதேநேரத்தில் கலைஞர் பிறந்தநாளினை, உதவிகள் வழங்கும் நாளாக அறிவித்து உதவிகள் வழங்க சொன்னார் தலைவர். அதன்படி வழங்கினோம். கரோனா ஊரடங்கு அறிவித்தபோது, சாலையோரத்தில் வசிக்கும் யாருமற்றவர்களுக்கு உணவுகள் வழங்கி வந்தோம்.

 

ஒவ்வொரு வருடமும் கலைஞர் பிறந்தநாளின்போது, ஏழை மக்களுக்கு பிரியாணி வழங்குவது என்னுடைய வழக்கம். அப்படித்தான் இந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கியபோது, ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்து உணவு வாங்கி உண்டார்கள். அதில் 90 சதவிதம் பேர் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு சாலையோரத்தில் வசிப்பவர்களாகவும், கரோனாவல் வேலையில்லை, அதனால் கையில் பணமில்லை, இதனால் அடுத்த வேளை உணவுக்கு தவிப்பவர்களாகவும் இருந்ததை அறிய முடிந்தது. உடனே ஒரு சமையல்காரரை ஏற்பாடு செய்து தினமும் மதியம் தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், வெஜிடபுள் பிரியாணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவை தயார் செய்து வழங்க வேண்டும் என சொன்னேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சி நிர்வாகியை தலைமையேற்க செய்து கட்சி அலுவலகத்தில் வைத்து அவர்கள் கையால் அந்த உணவை மக்களுக்கு வழங்குகிறார்கள். தினமும் 250 பேருக்கு மேல் சாப்பிடுகிறார்கள்.

 

எங்கள் கட்சி நிர்வாகிகள் கூட இதற்கு நாங்கள் நிதி தருகிறோம் என்றார்கள் வேண்டாம் என சொல்லிவிட்டேன். ஜூன் 23ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள். இந்தாண்டு கட்சியினர் பேனர் வைத்து வாழ்த்து சொல்ல முடிவு செய்தார்கள். கரோனாவால் அனைத்து தரப்பினரும் கவலையில் உள்ளபோது, இதெல்லாம் தேவையில்லை என தடுத்துவிட்டேன். குடியாத்தம் பகுதி கழக நிர்வாகிகள் என் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு உணவு வழங்குங்கள் என 190 மூட்டை அரிசி கொண்டு வந்து கட்சி அலுவலகத்தில் இறக்கியுள்ளார்கள். இப்படி கட்சியினரின் ஈடுபாடு போன்றவை தொடர்ச்சியாக உணவு வழங்க முடிகிறது. தினமும் உணவு வழங்குங்கள், சாப்பாடு வாங்க என்று ஆள்வரவில்லையோ அதற்கடுத்த நாள்முதல் உணவு வழங்குவதை நிறுத்திவிடுங்கள் என சொல்லிவிட்டேன். இதை விளம்பரத்துக்காக செய்யவில்லை, பசியால் வாடுபவர்களின் ஒருவேளை பசியை போக்குகிறோமே என்கிற சந்தோஷத்துக்காக வழங்குகிறேன் என்றார்.

 

120 நாட்களை கடந்தும் உணவு வழங்க, அதனை வாங்க ஏழைமக்கள் கூட்டம் இன்றளவும் குறையாமல் வருகிறார்கள் என்றால் கரோனாவால் ஏற்பட்ட துயரம் பெரியது என்பதை உணர்கிறது சமூகம்.

 

 

சார்ந்த செய்திகள்