
மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. கஜா புயலுக்கு இதுவரை நிவாரணமாக மக்களுக்கு ஒரு ரூபாய் கூட போய்ச்சேரவில்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கஜா புயல் தாக்குதல் சம்பவம் நடைபெற்று இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அரசு சார்பில் ஒரு ரூபாய் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வழங்கப்படவிலல்லை. கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாக அரசு கூறுகிறது. கணக்கெடுப்பு பணியே நடக்காமல் ஒரு முதலமைச்சர் எப்படி மத்திய அரசிடம் 4வது நாளே போய் 15 ஆயிரம் கோடி வேண்டும் என்று பிரதமரிடம் போய் மனு கொடுத்தார் என்று தெரியவில்லை. ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை என்றால் கணக்கெடுத்துக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். கணக்கெடுத்த பிறகு தான் பிரமரைச் சந்திப்பதாகவும் கூறுகிறார்கள். ஏன் இந்த முரண்பட்ட நிலை. தமிழக முதல்வர் பிரமதரைச் சந்தித்தது கஜா புயலுக்காக சந்தித்ததாக நாங்கள் கருதவில்லை. சில அரசியல் தேவைகளையொட்டி அவர் சந்தித்தாக நாங்கள் கருதுகிறோம். அதற்கு கஜா புயலை ஒரு காரணம் காட்டியிருக்கிறார் என்ற தெரிகிறது.
அதன் வெளிப்பாடுதான் தேர்தல் கமிசனே முன்வந்து 20 தொகுதிகளுக்கு இப்போது இடைதேர்தல் சாத்தியமா என்று சொல்லியிருக்கிறது. யாருமே கேட்காமல் தேர்தல் கமிசன் முந்திக்கொண்டு சொல்லியிருப்பதைப் பார்த்தால் அதன் நோக்கம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இன்னமும் முகாம்களில் உள்ள மக்கள் வீடு திரும்ப முடியவில்லை. நிவாரணம் வழங்காமல் அந்த மக்களின் வாழ்வு மிகப்பெரிய சோதனைக்கு ஆளாகி இருக்கிறது.
புயல் பாதிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் அழிந்துள்ளது. இங்கெல்லாம் கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என்று தெரிவிக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கு நடைபெறுவதாக தெரியவில்லை. தமிழகத்திற்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டும் கூட பிரதமர் மோடி இந்த பகுதிகளை வந்து பார்க்க வரவில்லை. இதனை பார்க்கும் போது தமிழகத்தை மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
15 ஆயிரம் கோடிக்கு பிரதமரிடம் முதலமைச்சர் மனு கொடுத்துள்ளார். ஆனால் 200 கோடி என்ற அளவில் முதல் தவணையாக அறிவித்துள்ளது மத்திய அரசு. எவ்வளவு கொடுப்பார்கள் என்று நமக்கு நிச்சயமாக தெரியாது. பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு 2015ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி, வெள்ளம், புயல் சேததத்திற்கு மத்திய அரசிடம் கேட்ட நிவாரண தொகை 97,352 கோடி வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு 4242 கோடி தான் வழங்கியிருக்கிறது. அதாவது 5 சதவீதம் நிதி தான் வழங்கியிருக்கிறது. இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது மத்திய அரசிடம் தமிழக அரசு கையேந்துகிற நிலை உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதேபோல் மேகதாதுவில் அணைக்கட்டுகிற கர்நாடக அரசைக் கண்டித்து டிசம்பர் 4ம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கஜா புயல் பாதிப்பு தொடர்பாகவும் அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து ஆலோசித்து உள்ளோம் என்று திண்டுக்கல்லில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேட்டியின் போது சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்பட சில பொறுப்பாளர்கள் இருந்தனர்!