மத்தியில் ஆளும் பாஜக பாசிச அரசை கண்டித்தும் தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி அரசின் குட்கா ஊழலை கண்டித்து வேலூர் மத்திய மாவட்டத்தின் சார்பில் 28 9 2018 ஆம் தேதி காலை 9 மணி அளவில் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில், வேலூர், குடியாத்தம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த திமுகவினர் தொரப்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மத்திய மாநில அரசுகளின் எதேச்சதிகாரப் போக்கு, பாசிச போக்கு மற்றும் ஊழலை கண்டித்து ரயில் மறியல் செய்தனர்.
போராட்டத்துக்கு முன்பாக திமுகவினர் ஊர்வலமாக சென்ற பொழுது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்ய முயன்ற திமுகவினரை மறியல் செய்ய விடாமல் போலீசார் தடுத்தனர். அதையும் மீறி திமுக தொண்டர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து திருவண்ணாமலையில் இருந்து காட்பாடி சென்ற ரயிலை மறித்தனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய நந்தகுமார் எம்.எல்.ஏ, மத்திய - மாநில அரசுகள் தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் செய்யாததால் பல பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் எனது தொகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரியூர் அருகே மத்திய - மாநில அரசுகள் இணைந்து கட்டிவரும் மேம்பால பணியால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாங்கள் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தபின்பு அவசரம் அவரசமாக வேலை செய்கிறார்கள். அதிகாரிகள் அரியூர் மேம்பால பணிகள் இரண்டு மாதத்திலும் கஸ்பா, சித்தேரி பாலம் பணிகள் 10 நாளிலும் முடித்து தருவதாக அறிவித்துள்ளார்கள். நாங்கள் இரண்டு மாதம் நேரம் தருகிறோம். 3 பணிகளை இரண்டு மாதத்தில் முடிக்கவில்லையென்றால் மீண்டும் ஒருப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.
போராட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.