வேலூர் மாவட்டம் ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 54 வயதாகும் இவர் கடந்த பல வருடங்களாகவே குடிக்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடிப்பார், குடிப்பவர், அதே அளவுக்கு உணவு சாப்பிட வேண்டும் என்பதில் அக்கறை காட்டமாட்டார் என்கிறார்கள்.

இதனால் இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அல்சர் நோய் வந்துள்ளது. வயிற்று வலியால் துடிக்க தொடங்கியபின், மருத்துவமனை சென்று பரிசோதித்தபோது, அல்சர் முற்றியுள்ளது. சில வருடங்களுக்காவது குடிக்காமல், காரம் உண்ணாமல் இருக்க வேண்டும். சரியான நேரத்துக்கு உணவு உண்ண வேண்டும், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
சில நாட்கள் அமைதியாக இருந்தவர், பின்னர் எந்த அல்சரையும் சரக்கு சரியாக்கிவிடும் எனச்சொல்லி மீண்டும் குடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 26ந்தேதி இரவு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள மதுக்கடை அருகில் குடி போதையில் மயங்கி விழுந்துள்ளார். இவர் இப்படி அடிக்கடி போதையில் மயங்கி கீழே விழுந்துக்கிடப்பவர் என்பதால் அந்த வழியாக சென்றவர்கள் யாரும் அவரை பொருட்படுத்தக்காணோம்.
இந்நிலையில் 27ந்தேதி காலை அவர் மயங்கிகிடந்த அதேயிடத்தில் படுத்துக்கிடப்பதை பார்த்து சிலர் அருகே சென்று பார்த்தபோது, அவர் இறந்துப்போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகினர். இதுப்பற்றி போலிஸாருக்கு தகவல் சொல்ல ஆம்பூர் நகர போலிஸார் சம்பவயிடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உண்மையில் அல்சர் நோய் கொன்றதா அல்லது வேறு காரணமா என மருத்துவர்களிடம் அறிக்கை கேட்டுள்ளனர் போலிஸார்.