Skip to main content

1100 கோரிக்கை மனுக்களை வேலூர் கலெக்டரிடம் வழங்கிய திமுக நிர்வாகிகள்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 


கரோனா பாதிப்பு தொடங்கிய தினத்தில் இருந்து கடந்த 45 நாட்களாக திமுகவினர் பல்வேறு விதமான உதவிகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து திமுக தலைமை அறிவித்த 'ஒன்றிணைவோம் வா' என்கிற தலைப்பில் உதவி எண்ணை அறிவித்து தமிழ்நாடு முழுவதும் உதவி கேட்டவர்களுக்கு வீடு தேடிச்சென்று அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் மூலமாக உதவிகளை செய்தது.


மேலும், திமுகவின் ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் கீழ் செயல்படும் இணையதளத்தில் ஏழை மக்களிடமிருந்து பல்வேறு விதமான உதவிகளை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த உதவிகளை அரசு மட்டுமே செய்ய முடியும் என்கிற நிலைமை. குறிப்பாக வாழ வீடுயில்லை, மாதாந்திர உதவித்தொகையில்லை, வேலையில்லை, மாற்றுத்திறனாளியான எனக்கு மருத்துவ வசதியில்லை, மருந்து பொருள் வாங்க பணமில்லை போன்ற பல்வேறு விதமான உதவிகளை கேட்டிருந்தனர்.


தற்காலிகமாக மட்டுமே இந்த உதவிகளை திமுகவினர் செய்ய முடியும். நிரந்தரமான தீர்வு என்பது அரசின் கைகளிலேயே உள்ளது என்பதால் இந்த கோரிக்கைகள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அப்படியே அந்தந்த திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பியது திமுக தலைமை.




அந்த கோரிக்கைகளை திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் எடுத்துச்சென்று, மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து தந்து நடவடிக்கை எடுக்க என வேண்டுகோள் விடுக்க வேண்டும், என உத்தரவிட்டது.


அதன்படி தமிழகத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், பொதுமக்கள் திமுகவிடம் ஆன்லைன் மூலமாக அனுப்பிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் தரத்துவங்கினர்.


வேலூர் மாவட்ட கோரிக்கை மனுக்களை வேலூர் தொகுதி எம்.பி கதிர்ஆனந்த் தலைமையில் திமுக மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ, கார்த்திகேயன் எம்.எல்.ஏ போன்றவர்களும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இணைய வழியாக பெறப்பட்ட 1,376 பிரதான கோரிக்கை மனுக்களை அரக்கோணம் தொகுதி எம்.பியும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஜெகத்ரட்சகன், மா.செவும், எம்.எல்.ஏவுமான காந்தியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 1,100 கோரிக்கை மனுக்களை முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி தலைமையில் எம்.பி அண்ணாதுரை, போளுர் எம்.எல்.ஏ கே.வி.சேகரன், வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்கர், செங்கம் எம்.எல்.ஏ கிரி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணிவேந்தன் போன்றவர்கள் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் வழங்கினர். 

சார்ந்த செய்திகள்