வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் 18- வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினமும் வந்து குப்பை தொட்டிகளை சுத்தம் செய்வதில்லையாம். நீண்ட நாட்களாக குப்பை அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்கள் வாராததால், அந்த தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறதாம். அதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி இரவு மட்டுமல்லாமல் பகலிலும் மக்களை கடித்து பாடாய் படுத்துகிறதாம்.
குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தனித்தனியாக வந்து ஆம்பூர் நகராட்சி அதிகாரிகளிடமும் , பலமுறை தொலைபேசி வழியாகவும், நேரிலும் வந்து முறையிட்டுள்ளார்கள். அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். இதில் அதிருப்தியுற்ற பொதுமக்கள் என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனைப்படி அக்டோபர் 10- ஆம் தேதி காலை 18- வது வார்டு பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை பையில் போட்டு எடுத்து வந்து நகராட்சி அலுவலகத்தின் உள்நுழைவாயிலில் கொட்டினர். இதனால் அதிர்ச்சியான நகராட்சி அலுவலக ஊழியர்கள், என்ன இப்படி செய்யறீங்க என கோபமாக கேட்டனர். எங்க தெருக்களில் குப்பைகளை அல்லாததால் தெருவே நாறுகிறது. அங்கு கொட்டினால் தான் குப்பைகளை அள்ளுவதில்லை. அதனால் தான் இங்கு வந்து கொட்டுகிறோம் எனச்சொல்லி நூதனமான போராட்டத்தை நடத்தினர்.
இதில் அதிர்ச்சியான அதிகாரிகள் பொதுமக்களிடம் 1 மணி நேரம் சமாதானம் செய்து, இனிமேல் தினமும் குப்பைகளை எடுக்க துப்புரவு பணியாளர்களை அனுப்புகிறோம். தற்போதுள்ள குப்பைகளை எடுக்க இப்போதே பணியாளர்களை அனுப்புகிறோம் என கூறி நூதன போராட்டம் நடத்திய மக்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.