காவிரி வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு துரோகம் செய்வதை கண்டித்தும், இதற்கு ஒத்து ஊதும் அதிமுக அரசை கண்டித்து திமுக தனது கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தொடர் போராட்டம் நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஏப்ரல் 5ந்தேதி தமிழகத்தில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது திமுக. ஆளும்கட்சியான அதிமுக, பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் திமுக அழைப்பு விடுத்த முழு பந்த்துக்கு பெரும் ஆதரவு கிட்டியுள்ளது. இதனை வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அதிமுக அரசாங்கம் பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளது. இதில் கோபமான தமிழர்கள் பலயிடங்களில் பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் திருப்பத்தூர் அருகே ஒரு அரசு பேருந்தும், லாரியும் சேதமாகியுள்ளன.
வேலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே சென்ற பேருந்துகளை மத்திய திமுக அலுவலகத்தில் குவிந்துயிருந்த திமுக உட்பட எதிர்கட்சியினர் பார்த்து கோபமாகி பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் உடனடியாக பேருந்துகள் பனிமணைக்கு திரும்பி சென்றன.
அதேபோல், வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பேருந்து அதிபரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான சோளிங்கரை சேர்ந்த அந்த தொழிலதிபர் குடும்பத்தின் சார்பில் 50க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சோளிங்கரில் இருந்து திருத்தணி, அரக்கோணம், ஆற்காடு, வேலூர், ஆரணி, சென்னை, திருவள்ளுவர், சித்தூர் என பல பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் சோளிங்கர் டூ அரக்கோணம் சென்ற பேருந்து மீது யாரோ கல்கொண்டு எரிந்து கண்ணாடியை உடைத்துள்ளதாக தெரிகிறது. இதுப்பற்றி அத்தரப்பும் புகார் தரவில்லை என்பதால் எங்கு நடந்தது என தெரியாமல் தவிக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, இராணிப்பேட்டை பகுதிகளில் உள்ள 90 சதவித தோல் தொழிற்சாலைகள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சாலைகளை மூடியுள்ளன என்பது குறிப்பிடதக்கது. அதோடு, 90 சதவித வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரான நந்தகுமார் எம்.எல்.ஏ தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் காட்பாடியில் இரயில் மறியலில் ஈடுப்பட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.