தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்துக்குள் அனுமதிக்க செய்தியாளர் சிறப்பு அடையாள அட்டையை வேலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கியிருந்தார்.
இது குறித்து செய்தி சேகரிக்க, புகைப்படம் எடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு செய்தியாளர்கள் சென்றனர். ஆனால், உள்ளே செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று, வெளியே செல்லும்படி பாதுகாப்புக்கு நின்றிருந்த வேலூர் ஏடிஎஸ்பி சேகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் போலீஸ் அதிகாரிகளுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் வழங்கியிருந்த அடையாள அட்டைகளை செய்தியாளர்கள் தரையில் வீசினர்.
அரசின் அடையாள அட்டை இல்லாத அரசியல் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். ஆனால், அடையாள அட்டை வழங்கப்பட்ட செய்தியாளர்களை வெளியே செல்லும்படி கூறிய காவல்துறைக்கு பத்திரிகையாளர்கள் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் கூறியுள்ளனர்.
பள்ளிக்கல்வி துறை சார்பில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவிற்கு வந்த வேலூர் மேயர் சுஜாதாவை, தாமதமாக வந்தீர்கள் எனக் கூறி மேடை ஏற்றாமல் காவல்துறையின் முதல்வர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வெளியேற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.